நாகர்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்


நாகர்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 19 April 2019 4:00 AM IST (Updated: 18 April 2019 8:45 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கோவில்களில் வடசேரியில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 10–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேற்று 9–வது திருவிழா நடைபெற்றது. இதையொட்டி தேரோட்டம் நடந்தது. நேற்று  அதிகாலையில் கிருஷ்ணசாமிக்கு பல வகையான காய், கனி கொண்டு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜை நடந்தது. காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்து வந்த தேரானது 4 ரத வீதிகளையும் சுற்றி மதியம் 12 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது.

தேரோட்டத்தின்போது பக்தர்களுக்கு மோர், ரஸ்னா ஆகியவை வழங்கப்பட்டன.

தேரோட்டம் முடிந்த பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 இரவில் சாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. விழாவின் இறுதி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு சாமி ஆராட்டுக்கு எழுந்தருளல், முத்துக்குடை யானை பவனி, 5 மணிக்கு ஆராட்டு பூஜை, இரவு 10 மணிக்கு தெப்பத்திருவிழா ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து உள்ளனர்.

Next Story