ஓமலூர் அருகே வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து அ.தி.மு.க. தொண்டர் சாவு 76 வயதிலும் தனியாக வந்து ஓட்டு போட்டவர் இறந்த பரிதாபம்
ஓமலூர் அருகே வாக்குச்சாவடி வளாகத்தில் அ.தி.மு.க. தொண்டர் மயங்கி விழுந்து இறந்தார். 76 வயதிலும் தனியாக வந்த அவர் ஓட்டு போட்டு விட்டு திரும்பிய போது இறந்துள்ளார்.
ஓமலூர்,
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரியேரிப்பட்டி ஊராட்சி வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 76), அ.தி.மு.க. தொண்டர். இவர் நேற்று காலை 10 மணியளவில் வேடப்பட்டி அங்கன்வாடி மையத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு தனியாக ஓட்டு போட வந்தார். ஒரளவு திடமாக இருந்ததால் அவர் வரிசையில் நின்று வாக்குச்சாவடியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.
பின்னர் அவர் வாக்குச்சாவடி அறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனே அங்கிருந்த வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மயங்கி கிடந்த கிருஷ்ணனை சோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வாக்குச்சாவடியில் இறந்த அ.தி.மு.க. தொண்டரின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதது அங்கு ஓட்டுப்போட வந்தவர்களை கண்கலங்க செய்தது. இதையடுத்து உறவினர்கள் அவரது உடலை வீட்டுக்கு எடுத்து சென்றனர். 76 வயதிலும் தனியாக வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்ட முதியவர் வாக்குச்சாவடி வளாகத்தில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இறந்து போன கிருஷ்ணனுக்கு, ரத்தினம்மாள்(68) என்ற மனைவியும், முருகேசன்(51), செல்வம்(42), கோவிந்தன்(37) என்ற மகன்களும் உள்ளனர்.