கோயம்பேட்டில் குறைவான பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி


கோயம்பேட்டில் குறைவான பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி
x
தினத்தந்தி 18 April 2019 11:00 PM GMT (Updated: 18 April 2019 5:04 PM GMT)

குறைவான பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். மேலும் போக்குவரத்து துறையை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்பேடு,

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக கோயம்பேட்டில் பயணிகள் குவிந்தனர். குறைவான பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர். மேலும் போக்குவரத்து துறையை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் ஆணையம் பொதுவிடுமுறை அளித்து இருந்தது. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

சென்னையில் வெளியூர்களில் இருந்து பலர் குடும்பத்துடன் தங்கி பணிபுரிகின்றனர். அவர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் நேற்று முன்தினத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். ஒரே நேரத்தில் ஏராளமான பயணிகள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் குவிந்ததால் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

இதனால் போக்குவரத்து துறை அதிகாரிகள், பயணிகள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினர். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்கான மிக குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்களில் முண்டியடித்து கொண்டு ஏறி பயணம் செய்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு வரையில் பஸ்கள் மிகவும் குறைவான அளவிலேயே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் ஆத்திரம் அடைந்து கோயம்பேடு பஸ் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு போலீசாரும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் விரைந்து வந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பஸ்கள் இயக்குவது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் பஸ்கள் இயக்கப்படவில்லை. மீண்டும் பயணிகள் போராட்டத்தை மேற்கொண்டனர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தினர். பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது கீழே விழுந்ததில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

போக்குவரத்து துறை அதிகாரிகள் எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யவில்லை என்றும், பயணிகள் மீது கொஞ்சமும் அக்கறை காட்டவில்லை என்றும் பயணிகள் குற்றம் சாட்டினர். சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க முடியாமல் போய்விட்டதே என்று சிலர் புலம்பியும் தவித்தனர்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை அவ்வப்போது வந்த சில பஸ்களில் ஏறி பயணிகள் பயணம் செய்தனர். சிலர் அந்த பஸ்களின் மேற்கூரையில் ஏறி அமர்ந்து ஆபத்தான முறையிலும் பயணத்தை மேற்கொண்டனர். வடமாநிலங்களில் ரெயில்களில் தான் இப்படி ஆபத்தான முறையில் பயணம் செய்வார்கள். அந்த நிலைமை தற்போது தமிழகத்துக்கும் வந்துவிட்டதே? என்று பயணிகள் சிலர் ஆதங்கத்தோடு தெரிவித்தனர்.

குடும்பத்துடன் வந்திருந்த பயணிகள் அனைவரும் கையில் பிள்ளைகளுடனும், உடைமைகளுடனும் அங்கும், இங்குமாக பஸ்சை தேடி ஓடிய வண்ணம் இருந்தனர். நேற்று காலையில் பஸ்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், மீண்டும் போக்குவரத்து துறை பயணிகளை ஏமாற்றியது.

நேற்று காலையிலும் சொற்ப அளவிலான பஸ்களே இயக்கப்பட்டன. தேனி, மதுரை, சேலம், திருவண்ணாமலை, திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக காத்திருந்த பயணிகள் மேலும் ஆத்திரம் அடைந்தனர்.

‘அத்தி பூத்தாற் போல’ ஒரு பஸ் வந்தாலும், அதில் பயணிகள் ஓடி இடம் பிடிப்பதில் போட்டி போட்டனர். வயதானவர்களும், நோயாளிகளும், கைக்குழந்தை வைத்திருந்தவர்களும் இதனால் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள். சில பெண்கள் இடம்பிடிக்க ஓடும்போது தடுமாறி கீழே விழுந்தனர். பஸ்கள் நேற்று காலையும் சரிவர இயக்கப்படாததால், இயக்கப்பட்ட சில பஸ்களையும் பயணிகள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.

நேற்று பகல் நேரங்களில் இயக்கப்பட்ட சில பஸ்களில் தேனீக்கள் போல பயணிகள் பயணம் செய்தனர். கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல், பஸ்சின் மேற்கூரையிலும் சிலர் அமர்ந்து பயணித்தனர்.

குறைவான பஸ்கள் இயக்கப்பட்டதற்கான காரணம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பஸ் டிரைவர்களும், நடத்துனர்களும் வாக்களிப்பதற்காக விடுமுறை எடுத்துவிட்டனர். எனவே பஸ்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது’ என்றனர்.

நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட பஸ்களும் சரியான நேரத்துக்கு ஊர்களுக்கு போய் சேரவில்லை என்றும் சில பயணிகள் குற்றஞ்சாட்டி
இருக்கின்றனர்.

மேலும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் நேற்று காலை காத்திருந்தனர். நீண்டநேரமாகியும் பஸ்கள் வராததால் பயணிகள் ஆத்திரம் அடைந்து சாலைமறியலில் ஈடுபடப்போவதாக பஸ் நிலையத்தில் கூடினர்.

இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதன்பின்னரும் பஸ்கள் போதிய அளவிற்கு வராததால் வந்த அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களில் கொளுத்தும் வெயிலில் பஸ்சின் மேற்கூரைகளில் ஏறி அமர்ந்து பயணிகள் கூட்ட நெரிசலில் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

Next Story