எந்திர கோளாறால் பல இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு காரணமாக பல இடங்களில் தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆரணி,
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேவூர் ஊராட்சியில் ஸ்ரீராம் நகரில் உள்ள 134-வது வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவில்லை. கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் 7.45 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் சுமார் 45 நிமிடங்கள் வரை ஓட்டு போட வந்த வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
அதேபோல் கல்பூண்டி கிராமத்தில் 225-வது வாக்குச்சாவடி மையத்தில் மாதிரி வாக்குப் பதிவு செய்வதற்கு 30 நிமிடம் நேரம் எடுத்துக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுகுப்பம் கிராமத்தில் உள்ள 150-வது வாக்குச்சாவடி மையத்தில் பகல் 2 மணிக்கு வி.வி.பேட் எந்திரம் வேலை செய்யவில்லை. இதையடுத்து அதனை சரிசெய்ய அதிகாரிகள் முயன்றனர். ஆனால் சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து புதிய வி.வி.பேட் எந்திரம் வரவழைக்கப்பட்டது. பின்னர் 45 நிமிடங்களுக்கு பிறகு வாக்குப்பதிவு நடந்தது. இதனால் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மேலும் வி.வி.பேட் எந்திரம் பழுதாவதற்கு முன்பு 2 பேர் ஓட்டு போட்டு சென்றனர். ஆனால் அவை பதிவாகவில்லை. இதையடுத்து அவர்களை வரவழைத்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் ஓட்டு போட்டனர்.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை மையத்தில் உள்ள பாகம் எண் 138 வாக்குச்சாவடியில் 50 மாதிரி வாக்குப்பதிவுகள் முடிந்த பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது.
சுமார் 8.30 மணியளவில் அங்கு திடீரென வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. பின்னர் பெல் நிறுவன ஊழியர்கள் மூலம் சரி செய்யப்பட்டது. மீண்டும் அரை மணி நேரத்திற்கு பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஜெய்பீம் நகர் நடுநிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பூத் ஏஜெண்டு ஒருவர் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் அரை மணி நேரம் தாமதத்துடன் 7.30 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.
மேலும் வாக்காளர் ஒருவர் பூத் சிலிப் மட்டும் வைத்து கொண்டு வாக்களிக்க வந்தார். அவரை அலுவலர்கள் பூத் சிலிப் வைத்து ஓட்டு போட முடியாது அடையாள அட்டை கொண்டு வந்தால் தான் ஓட்டு போட முடியும் என்று கூறி அனுப்பினர். அப்போது அங்கு வந்த மற்றொரு அலுவலர் பூத் சிலிப் வைத்து ஓட்டு போடலாம் வாங்க என்று அந்த வாக்காளரை அழைத்து சென்றார். ஆனால் அங்கிருந்தவர்கள் பூத் சிலிப் வைத்து ஓட்டு போட முடியாது என்று மீண்டும் அவரை வெளியே அனுப்பினர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அதிகாரிகளை திட்டிவிட்டு வேகமாக சென்று விட்டார்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணமங்கலம் அருகே 5 புத்தூர் கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சுமார் 150 வாக்குகள் பதிவானபின்னர், வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. காலை 11 மணி அளவில் மாற்று வாக்குப்பதிவு எந்திரம் ஏற்பாடு செய்த பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது. இதன்காரணமாக சுமார் 2 மணி நேரம் வாக்குப்பதிவு செய்ய முடியாமல் வாக்காளர்கள் தவித்தனர்.
இதேபோல் ஒண்ணுபுரம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்திலும் வாக்குப்பதிவு எந்திர கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்தபின் வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாணாபுரம் அருகே உள்ள தலையாம்பள்ளம் கிராமத்தில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான வாக்காளர்கள் அந்த பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். வாக்கு ப்பதிவு எந்திரம் திடீர் என பழுதானதால் காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு 1 மணி நேரம் காலதாமதமாக 8 மணிக்கு தொடங்கியது. இதனால் வாக்களிக்க வந்தவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதேபோல் பாவப்பட்டு அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் 2 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்கு செலுத்த வந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story