பழுதான வாக்குப்பதிவு எந்திரத்தை உடனடியாக மாற்றாததால் வாக்காளர்கள் திடீர் போராட்டம் - விழுப்புரம் அருகே பரபரப்பு

விழுப்புரம் அருகே பழுதான வாக்குப்பதிவு எந்திரத்தை உடனடியாக மாற்றாததால் வாக்காளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் மொத்தம் 900 வாக்குகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இதற்காக ஏராளமான ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 2 பேர் வாக்குப்பதிவு செய்த நிலையில் காலை 7.05 மணிக்கு திடீரென மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு பழுதானது. இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. உடனே அந்த பழுதான வாக்கு எந்திரத்தை சரிசெய்யும் பணியில் வாக்குச்சாவடி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்த வாக்குப்பதிவு எந்திரம் சரிசெய்யப்பட்டதும் காலை 7.25 மணிக்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. 7.50 மணி வரை வாக்குப்பதிவு நடந்த நிலையில் திடீரென மீண்டும் பழுதானது. அதன் பிறகு தொழில்நுட்ப பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பழுதான எந்திரத்தை சரிசெய்யும் பணி நடந்தது. வெகு நேரமாகியும் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய முடியவில்லை.
இதனிடையே வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் மிகவும் அவதியடைந்தனர். பழுதான எந்திரத்திற்கு பதிலாக வேறொரு எந்திரத்தை பயன்படுத்தும்படி முறையிட்டனர். ஆனால் அதற்கும் வாக்குச்சாவடி அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை. காலை 10 மணி ஆகியும் பழுதான எந்திரம் மாற்றப்படாததால் 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையத்தின் முன்பு திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பழுதான எந்திரத்திற்கு பதிலாக வேறொரு எந்திரத்தை மாற்றி வாக்குப்பதிவை உடனடியாக தொடங்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வாக்காளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பிறகு காலை 10.30 மணியளவில் பழுதான எந்திரம் அகற்றப்பட்டு வேறொரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பொருத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்ததையடுத்து வாக்காளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இந்த திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story






