முத்துப்பேட்டை அருகே எந்திரங்கள் பழுதால் 2 வாக்குச்சாவடிகளில், 5 மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு


முத்துப்பேட்டை அருகே எந்திரங்கள் பழுதால் 2 வாக்குச்சாவடிகளில், 5 மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 18 April 2019 11:00 PM GMT (Updated: 18 April 2019 6:44 PM GMT)

முத்துப்பேட்டை அருகே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக 2 வாக்குச்சாவடிகளில் 5 மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்துறைப்பூண்டி,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 89 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. முத்துப்பேட்டை அருகே உள்ள பேட்டை, மங்களூர், குன்னலூர், குடிசேத்தி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க இருந்த நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகின. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

இதனால் வாக்களித்து விட்டு வேலைக்கு செல்லலாம் என திட்டமிட்டு வாக்குச்சாவடிகளுக்கு வந்த கூலி தொழிலாளர்கள் பலர், தங்கள் வாக்குகளை பதிவு செய்யாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட செம்படவன்காட்டில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பரிசோதித்தனர். அப்போது வாக்குப்பதிவு எந்திரம் சரியாக இயங்கியது. ஆனால் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய தயாரானபோது எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. எந்திரத்தில் ஏற்பட்ட பழுதை வாக்குச்சாவடியில் இருந்த அலுவலர்களால் சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து மாற்று எந்திரம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாற்று எந்திரம் 12 மணிக்குத்தான் வாக்குச்சாவடிக்கு வந்து சேர்ந்தது. இதன் காரணமாக 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு 5 மணி நேர தாமதத்திற்கு பிறகே தொடங்கியது.

எந்திரத்தில் பழுது ஏற்பட்டு வாக்குப்பதிவு தொடங்க தாமதமானதால் ஆத்திரம் அடைந்த வாக்காளர்கள் அதிகாரிகளை கண்டித்து வாக்குச்சாவடியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு செய்து விட்டுத்தான் இங்கிருந்து செல்வோம் என்று கூறி அவர்கள் அனைவரும் 5 மணி நேரமாக அங்கேயே காத்து இருந்தனர்.

மாற்று வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வந்த பின்னரே போராட்டத்தை வாக்காளர்கள் கைவிட்டனர். 5 மணி நேர தாமதத்தால் கைக்குழந்தையுடன் வந்த பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதேபோல் முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு 5 மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்குத்தான் தொடங்கியது. அதிகாரிகள் மாற்று எந்திரத்தை வரவழைத்து வாக்குப்பதிவை நடத்தினர். இதனையொட்டி அங்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

முத்துப்பேட்டை பகுதியில் 2 இடங்களில் 5 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கிய சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Next Story