திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவு 2 வாக்குகளை வாக்காளர்கள் பதிவு செய்தனர்


திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவு 2 வாக்குகளை வாக்காளர்கள் பதிவு செய்தனர்
x
தினத்தந்தி 18 April 2019 10:45 PM GMT (Updated: 18 April 2019 6:53 PM GMT)

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் 2 வாக்குகளை பதிவு செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 879 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 37 ஆயிரத்து 255 பெண் வாக்காளர்களும், 22 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 69 ஆயிரத்து 156 வாக்காளர்கள் உள்ளனர். திருவாரூர் தொகுதியில் 303 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. நாகை நாடாளுமன்ற தேர்தலுடன், காலியாக உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி நேற்று திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் தொடங்கியது. திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு வாக்கும், நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு வாக்கும் என 2 வாக்குகளை வாக்காளர்கள் பதிவு செய்தனர்.

இதனால் திருவாரூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தது.

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கே.கலைவாணன் கொரடாச்சேரி கமுகக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காலையிலேயே வந்து வாக்களிக்க வாக்காளர்கள் ஆர்வம் காட்டினர். இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலையிலேயே மக்கள் கூட்டம் அலைமோதியது. திருவாரூர் தொகுதியில் வாக்குப்பதிவு எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடைபெற்றது.

திருவாரூர் தண்டலை ஊராட்சி ஒன்றிய உயர்் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி மையத்தில் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வாக்களித்தார். முன்னதாக வாக்குச்சாவடி வந்த கலெக்டர், திறந்தவெளி வெயிலில் வாக்காளர்கள் நிற்பதை கண்டு, உடனடியாக அவர்களை அழைத்து நிழல் பகுதியில் வரிசையாக நிற்குமாறு அறிவுறுத்தினார்.

அப்பகுதியில் வெயிலில் வாக்காளர்கள் அவதிப்படாமல் இருக்க உடனே நிழற் கூடாரம் அமைக்க உத்தரவிட்டார். மேலும் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் வாக்குப்பதிவு நடைபெறுவது குறித்தும், தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா? என பார்வையிட்டு கேட்டறிந்தார். பின்னர் அவர் வாக்களிக்க நீண்ட வரிசையில் வாக்காளர்களுடன் வரிசையில் 10 நிமிடம் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் நாகை நாடாளுமன்றம் மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 1,471 வாக்குசாவடிகள் உள்ளன. இதில் 82 பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவம், போலீஸ், ஊர்காவல் படை என மொத்தம் 2,595 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story