‘பூத் சிலிப்’ கிடைக்காததால், திருவாரூரில் வாக்காளர்கள் அவதி


‘பூத் சிலிப்’ கிடைக்காததால், திருவாரூரில் வாக்காளர்கள் அவதி
x
தினத்தந்தி 18 April 2019 10:45 PM GMT (Updated: 18 April 2019 6:55 PM GMT)

‘பூத் சிலிப்’ கிடைக்காததால் திருவாரூரில் வாக்காளர்கள் அவதிப்பட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி ஆகிய 3 தொகுதிகள் நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டவை. மன்னார்குடி தொகுதி தஞ்சை நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்தது.

நாகை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சரவணன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் செல்வராசு, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அனிதா, அ.ம.மு.க. சார்பில் செங்கொடி, நாம் தமிழர் கட்சி சார்பில் மாலதி, மக்கள் நீதி மய்யம் சார்பில் குருவையா, சுயேச்சைகள் அம்பிகாபதி, வேதரத்தினம், ஜெயலட்சுமி, சம்பத், சம்பத்குமார், சிவக்குமார், சவுந்தரராஜன், பிரேம், ஜெகதீஷ் என 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நாகை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்காக திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 303 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. திருத்துறைப்பூண்டி தொகுதியில் 274 வாக்குச்சாவடிகளும், நன்னிலம் தொகுதியில் 309 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. திருவாரூர் மாவட்டத்தில் 82 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதலே வாக்காளர்கள் கூட்டம் அலை மோதியது. திருவாரூர் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் மூலம் வழங்கப்பட வேண்டிய ‘பூத் சிலிப்’ கிடைக்கவில்லை.

இதன் காரணமாக வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் விவரங்களை சரிபார்ப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் வாக்காளர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து அவதிப்பட்டனர்.

பல வாக்குச்சாவடிகளில் நகராட்சி ஊழியர்கள் மூலம் ‘பூத் சிலிப்’ வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடிகளை கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஆனந்த், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கண்காணிப்பு அறையில் இருந்தபடி கண்காணித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

கொரடாச்சேரி ஒன்றியம் தாழைக்குடியில் உள்ள தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் நாகை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தாழை சரவணன் தனது வாக்கை பதிவு செய்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராசு கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார்.

அ.ம.மு.க. வேட்பாளர் செங்கொடி அகரத்திருநல்லூர் தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே ஆதிச்சபுரம் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறு, விறுப்பாக நடைபெற்றது. அதில் 3 மற்றும் 4-வது வார்டுகளுக்கான வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. அதனை ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்னர் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

Next Story