தேர்தலையொட்டி தஞ்சை பெரியகோவில் வெறிச்சோடியது வெளிநாட்டினர் மட்டும் குறைந்த அளவே வந்தனர்


தேர்தலையொட்டி தஞ்சை பெரியகோவில் வெறிச்சோடியது வெளிநாட்டினர் மட்டும் குறைந்த அளவே வந்தனர்
x
தினத்தந்தி 18 April 2019 10:45 PM GMT (Updated: 18 April 2019 7:13 PM GMT)

தேர்தலையொட்டி தஞ்சை பெரியகோவில் வெறிச்சோடி காணப்பட்டது. வெளிநாட்டினர் மட்டும் ஆங்காங்கே தென்பட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம் பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராள மானோர் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் முடிவடைந்த பின்னர் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக வெளிநாட்டினர் வருகையும் அதிக அளவில் உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி பெரியகோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தஞ்சை மட்டும் அல்லாது தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஒன்றிரண்டு பேர் தான் தென்பட்டனர்.

வெளிநாட்டை சேர்ந்த பக்தர்கள் தான் ஆங்காங்கே தென்பட்டனர். இது தவிர கேரளா, போன்ற வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் ஆங்காங்கே தென்பட்டனர். இருப்பினும் பெரியகோவில் வெறிச்சோடி காணப்பட்டது. கோடை விடுமுறை காலத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்படும். ஆனால் நேற்று தேர்தல் நடந்ததால் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து பெரியகோவில் வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story