சேலம் அருகே சொந்த கிராமத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுடன் வரிசையில் நின்று ஓட்டு போட்டார்


சேலம் அருகே சொந்த கிராமத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுடன் வரிசையில் நின்று ஓட்டு போட்டார்
x
தினத்தந்தி 18 April 2019 11:30 PM GMT (Updated: 18 April 2019 7:27 PM GMT)

சேலம் அருகே தனது சொந்த கிராமத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுடன் வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.

எடப்பாடி,

தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என்று முக்கிய பிரமுகர்கள் தங்களின் சொந்த ஊர்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட்டனர். அந்த வகையில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று காலையில் வாக்களித்தார்.

இதற்காக அவர் காலை 6.30 மணியளவில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்கு புறப்பட்டார். அங்கிருந்து சிலுவம்பாளையத்தில் உள்ள வீட்டுக்கு காலை 7.15 மணியளவில் வந்து சேர்ந்தார். அங்கு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்பை எடுத்து கொண்டு, வீட்டை ஒட்டி அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு காலை 7.40 மணியளவில் நடந்து வந்தார்.

அங்கு அவர் பொதுமக்களுடன் வரிசையில் நின்றார். மேலும் வரிசையில் நின்ற பொதுமக்களிடம் சகஜமாக பேசினார். பின்னர் 7.50 மணிக்கு வாக்குச்சாவடிக்குள் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.

இதையடுத்து வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்தவுடன் அழியாத மை வைக்கப்பட்ட தனது இடது கை ஆள் காட்டி விரலை அவர் உற்சாகமாக காண்பித்தார். பின்னர் அவர் தனது வீட்டுக்கு நடந்து சென்றார். தொடர்ந்து தனது கிராமத்து வீட்டில் இருந்து சேலத்தில் உள்ள வீட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

முதல்-அமைச்சர் ஓட்டு போட்டதையொட்டி, அந்த வாக்குச்சாவடி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story