மயிலாடுதுறையில் 8 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது 1 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது


மயிலாடுதுறையில் 8 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது 1 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 19 April 2019 4:15 AM IST (Updated: 19 April 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் 8 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானது. இதனால் வாக்குப்பதிவு 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் உள்ள 266 வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு சிறிது நேரத்தில் சூடுப்பிடித்தது. திருவிழந்தூர், கஞ்சாநகரம், பட்டவர்த்தி, தருமபுரம், மாதிரிமங்கலம், அன்னவாசல், திருவாலங்காடு, பாண்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள 8 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானது. பின்னர் எந்திரம் சரி செய்யப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனால் மேற்கண்ட வாக்குச்சாவடி மையங்களில் 1 மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. திருவிழந்தூர் நகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் நேற்று மாலை 3 மணி வரை 47.36 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சினிமா தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வாக்குப்பதிவு செய்ய வசதியாக 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் நகரில் முக்கிய கடைவீதிகள் வெறிச்சோடி கிடந்தன.

Next Story