ஆண்டிப்பட்டி அருகே, மாதிரி வாக்குகளை அழிக்காமல் நடந்த ஓட்டுப்பதிவு - வாக்குச்சாவடி அலுவலர் இடமாற்றம்


ஆண்டிப்பட்டி அருகே, மாதிரி வாக்குகளை அழிக்காமல் நடந்த ஓட்டுப்பதிவு - வாக்குச்சாவடி அலுவலர் இடமாற்றம்
x
தினத்தந்தி 19 April 2019 4:00 AM IST (Updated: 19 April 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே மாதிரி வாக்குகளை அழிக்காமல் ஓட்டுப்பதிவு நடந்தது. இது தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலசமுத்திரம் கிராமத்தில் 2 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமத்தில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. பாலசமுத்திரத்தில் உள்ள 67-ம் எண் வாக்குச்சாவடியில் நேற்று காலை வழக்கம் போல் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு ஏந்திரத்தின் செயல்பாடு குறித்து, வாக்குச்சாவடி முகவர்களுக்கு விளக்கும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதன்பிறகு அந்த வாக்குகளை அழித்து விட்டு தான், மீண்டும் வாக்குப்பதிவை தொடங்க வேண்டும். ஆனால் அங்கிருந்த பணியாளர்கள், மாதிரி வாக்குகளை அழிக்காமல் வாக்குப்பதிவை தொடங்கி விட்டனர்.

வாக்குப்பதிவு தொடங்கி சில மணி நேரம் ஆகி விட்டது. அதன்பிறகு தான், மாதிரி வாக்குகளை அழிக்காமல் வாக்குப்பதிவு நடத்தியது வாக்குச்சாவடி அலுவலருக்கு தெரியவந்தது. இதனையடுத்து வாக்குப்பதிவு எந்திரத்தை திறந்து, மாதிரி வாக்குகளை அவர் அழிக்க முயன்றார். ஆனால் அதற்கு வாக்குச்சாவடி முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது.

இதனையடுத்து வாக்குச்சாவடியில் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தார். பின்னர் அனைத்து கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களிடமும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, கவனக்குறைவாக செயல்பட்ட வாக்குச்சாவடி அலுவலரை மாற்ற வேண்டும் என்று முகவர்கள் கூச்சலிட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் பல்லவி பல்தேவிடம் போலீஸ் சூப்பிரண்டு தகவல் தெரிவித்தார். அவரது உத்தரவின்பேரில் பாலசமுத்திரம் வாக்குச்சாவடி அலுவலர் சங்கரன் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கவுதம் என்பவர் நியமிக்கப்பட்டார்.

மேலும் வாக்கு எண்ணிக்கை நாளன்று மாதிரி வாக்குகளை கழித்து விட்டு, பதிவான வாக்குகளை மட்டும் கணக்கில் எடுத்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனைத்து கட்சி முகவர்களும் ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது. இதுபற்றி அறிந்த தேனி நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் அங்கு சென்று கட்சியினரிடம் நடந்த விவரம் குறித்து விசாரித்தார். மாதிரி வாக்குகளை அழிக்காமல் ஓட்டுப்பதிவு நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story