பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றிய வாக்காளர்கள்
x
தினத்தந்தி 18 April 2019 11:00 PM GMT (Updated: 18 April 2019 7:58 PM GMT)

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஜனநாயக கடமையாற்றினர்.

பெரம்பலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பெரம்பலூர் (தனி), திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் (தனி), முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியலின்படி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் 13,76,499 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 6,72,146, பெண் வாக்காளர்கள் 7,04,273, இதர வாக்காளர்கள் 80 பேர் உள்ளனர்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் என்.ஆர்.சிவபதி, தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ராஜசேகரன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முத்துலட்சுமி, நாம் தமிழர் கட்சி சார்பில் சாந்தி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஓட்டுப்பதிவிற்காக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 1,644 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வீதம் 3,288 வாக்குப்பதிவு எந்திரங்களும், 1,644 கட்டுப்பாட்டு எந்திரங்களும், முதன்முறையாக இந்த தேர்தலில் வாக்காளர்கள் தனது வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரம் (வி.வி.பேட்) 1,644-ம் ஏற்கனவே போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேற்று காலை சரியாக 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், வாக்காளர் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரம், கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றின் சீல்களை வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் உடைத்து, அதனை ஒவ்வொன்றுடன் பொருத்தி ஓட்டுப்பதிவிற்கு தயார் நிலையில் வைத்தனர். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர், துறையூர், முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூர், குளித்தலை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேற்று ஓட்டுப்பதிவு தொடங்கியவுடன் நிறைய பேர் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தனர். அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களித்தனர். இதனால் காலையிலேயே நிறைய வாக்குச்சாவடி மையங்களில் ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து சென்றனர். வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களித்தவுடன்அதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் வி.வி.பேட் எந்திரத்தில் வாக்காளர்கள் வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண்ணும், சின்னமும் அடங்கிய ஒப்புகை சீட்டு, அந்த எந்திரத்தின் கண்ணாடி வழியே தெரிந்தது.

பகல் நேரத்தில் வெயில் கடுமையாக கொளுத்தியதால் வாக்காளர்கள் நிறைய பேர் காலை 11 மணிக்கு முன்பாக வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர். பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் காலையிலேயே பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சாந்தா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி ஆகியோர் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

இதேபோல் குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தனது சொந்த ஊரான அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், பெரம்பலூர் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன் தனது சொந்த ஊரான எளம்பலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் வாக்கினை பதிவு செய்தனர். பெரம்பலூர் எம்.பி. மருதைராஜா தனது சொந்த ஊரான ரெங்கநாதபுரத்தில் உள்ள திரவியம் சகாய மானிய தொடக்கப்பள்ளியில் வாக்கினை பதிவு செய்தார். அந்த மையம் உள்பட பல்வேறு வாக்குப்பதிவு மையங் களை தேர்தல் அதிகாரி சாந்தா, போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

காலையில் 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை விறு விறுப்பாக நடைபெற்றது. ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் அந்தந்த வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்காளர்கள் வாக்கினை உறுதி செய்யும் எந்திரம், கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றை வாக்குச்சாவடி அலுவலர்கள், வேட்பாளர்களின் பூத் ஏஜெண்டு முன்னிலையில் சீல் வைத்து, லாரிகளில் ஏற்றி போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story