மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்றி வைத்ததாக கூறி அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் அதிகாரிகளிடம் வாக்குவாதம்


மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்றி வைத்ததாக கூறி அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் அதிகாரிகளிடம் வாக்குவாதம்
x
தினத்தந்தி 18 April 2019 11:00 PM GMT (Updated: 18 April 2019 8:22 PM GMT)

புதுக்கோட்டை மச்சு வாடியில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்றி வைத்ததாகக்கூறி அ.ம.மு.க. வேட்பாளர் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சுமார் 30 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

புதுக்கோட்டை,

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன், அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் உள்பட 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

இதில் முதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 1 முதல் 16 வரை உள்ள வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் இடம் பெற்று உள்ளன. 2-வது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் 17 முதல் 24 வரை உள்ள வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் இடம் பெற்று உள்ளன. இதில் 2-வது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முதல் இடத்தில் சாருபாலா தொண்டைமான் பெயர் உள்ளது.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டையில் உள்ள மச்சுவாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில் முதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை 2-வதாகவும், 2-வது வாக்குப்பதிவு எந்திரத்தை முதலாவதாகவும் வைத்து வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் ஆத்திரமடைந்த அ.ம.மு.க.வினர் நாங்கள் 2-வது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முதலில் சாருபாலா தொண்டைமான் சின்னமான பரிசு பெட்டகம் உள்ளது எனக்கூறி தான் பிரசாரம் செய்து வந்தோம்.

இந்நிலையில் நீங்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்றி வைத்து உள்ளதால், எங்களுக்கு விழவேண்டிய வாக்குகள் மாற்று கட்சியினருக்கு விழ வாய்ப்பு உள்ளது எனக்கூறி வாக்குப்பதிவு மையத்தில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் யாரும் வாக்களிக்க முடியாதபடி வாக்குச்சாவடியின் முன்பு நின்று மறித்து கொண்டு வாக்காளர்கள் யாரையும் வாக்குப்பதிவு மையத்திற்குள் விடவில்லை. இதனால் சுமார் 4 மணியளவில் மச்சுவாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த சாருபாலா தொண்டைமான் மற்றும் அவரது மகன் பிருத்வி தொண்டைமான் ஆகியோர் மச்சுவாடி நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு வந்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், தாசில்தார் பரணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாருபாலா தொண்டைமான் மற்றும் அ.ம.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் அதை ஏற்கவில்லை. மேலும் ஆட்சேபனையை புகாராக கொடுத்தால் அதுகுறித்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர். அதை தொடர்ந்து வாக்குப்பதிவு தொடர அனுமதித்தனர். இதனால் சுமார் 30 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

இதைதொடர்ந்து அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், திருச்சி திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை பகுதிகளில் வாக்கு எந்திரம் இடம் மாறியுள்ளது என்று திருச்சி கலெக்டரிடம் தெரிவித்தேன். அவரும் எந்தெந்த பகுதி என்று கேட்டு அதை மாற்றியுள்ளார். ஆனால் புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள நகராட்சி நடு நிலைப் பள்ளியில் எங்களது பூத் ஏஜெண்டு வாக்கு எந்திரம் இடமாறியுள்ளது என்று தெரிவித்தும் எந்த மாறுதலும் செய்யவில்லை. முதல் எந்திரம் இருக்க வேண்டிய இடத்தில் இரண்டாவது எந்திரமும், இரண்டாவது எந்திரம் இருக்கும் இடத்தில் முதல் எந்திரமும் உள்ளது. இதில் இரண்டாவது எந்திரத்தில் முதல் பெயர் என்னுடையது என்று கூறிதான் ஓட்டு கேட்டு வந்துள்ளேன். எனவே வாக்கு மாறுவதற்கான வாய்ப்புள்ளது. எங்களுக்கு வாக்கு விழக்கூடாது என்பதற்காகவே இது போல் செய்துள்ளனர். இதனால் நான் மறு வாக்கு பதிவு கேட்டுள்ளேன், இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.

கறம்பக்குடி பேரூராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகளில் அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் மகள் ராதா நிரஞ்சனி பார்வையிட்டார். அப்போது மீன்மார்க்கெட் அருகே உள்ள 224-எண் வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வரிசையை மாற்றி இருப்பதாகவும், சாருபாலா தொண்டைமானின் முகம் மெழுகால் மறைக்கப்பட்டிருப்பதாக கூறி தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அ.ம.மு.க.வினர் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கும் படியும், தற்போது கலைந்து செல்லும் படியும் கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story