கரூர் மாவட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்


கரூர் மாவட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்
x
தினத்தந்தி 19 April 2019 4:30 AM IST (Updated: 19 April 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கரூர் மாவட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பொதுமக்களுடன் சேர்ந்து முக்கிய அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், வணிகர்கள் உள்ளிட்டோரும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து விட்டு சென்றனர். கரூர் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்று வாக்களித்தார். முன்னதாக அவர் நேற்று காலையில் கரூர் வெங்கமேடு, வாங்கப்பாளையம் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்குப்பதிவு எப்படி நடக்கிறது? என பார்வையிட்டார்.

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்களித்தார். அப்போது அவரை பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் எடுக்கும்போது, இரட்டை விரலை காண்பித்தார். பின்னர் சில நொடியில் சுதாரித்து கொண்டு தனது கையில் மை வைக்கப்பட்டிருப்பதை அடையாளம் காட்டி வாக்களித்து விட்டேன் என தெரிவித்தார். இதேபோல் நெரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கீதா எம்.எல்.ஏ. வாக்களித்தார்.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி

இதேபோல், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். இந்த நிலையில் புதுப்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வரிசைப்படி இல்லை என குற்றம் சாட்டி தேர்தல் அதிகாரிக்கு போனில் செந்தில்பாலாஜி தகவல் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த தி.மு.க. முகவர்கள் போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. பின்னர் அங்குள்ள அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்ததன் பேரில் தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்தது.

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி

இதேபோல், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட பெரியதிருமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் அவர் மை வைக்கப்பட்ட தனது விரலை நிருபர்களிடம் உயர்த்தி காட்டினார்.

அ.ம.மு.க. வேட்பாளர் பி.எஸ்.என்.தங்கவேல் வெஞ்சமாங்கூடலூர் அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

கலெக்டர் அன்பழகன்

கரூர் அருகே காளியப்பனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகன் நேற்று காலை 8.30 மணியளவில், தனது மனைவி பூமாவுடன் வந்து வாக்களித்தார்.

Next Story