மின்னணு எந்திரத்தில் பதிவான ஓட்டு எண்ணிக்கை அதிகமாக காட்டியது: 1½ மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்


மின்னணு எந்திரத்தில் பதிவான ஓட்டு எண்ணிக்கை அதிகமாக காட்டியது: 1½ மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்
x
தினத்தந்தி 18 April 2019 10:45 PM GMT (Updated: 18 April 2019 8:46 PM GMT)

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டு எண்ணிக்கை அதிகமாக காட்டியதால் திருக்காம்புலியூரில் 1½ மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம் செய்யப்பட்டது. அதிகாரிகளுடன் அரசியல் கட்சியின் முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணராயபுரம்,

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்காம்புலியூரில் அரசு தொடக்கப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 518 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு அரசியல் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டன. அதன்பின் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் ஓட்டினை பதிவு செய்ய வரிசையாக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வாக்குப்பதிவு எண்ணிக்கையை அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சியின் முகவர்கள் சரிபார்த்து வந்தனர். அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டு எண்ணிக்கை, பட்டியலில் உள்ளதை விட 50 எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. இதனால் வாக்குச்சாவடி முகவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் கட்டுப்பாட்டு எந்திரத்தில் பதிவான வாக்குகளை சரிபார்த்தனர். அப்போது மாதிரி வாக்குப்பதிவு ஓட்டுகள் 50 எண்ணிக்கை அழிக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின் போது இந்த 50 வாக்குகளை கழித்துக்கொள்ளலாம். அதற்கு, 17 சி என்ற படிவம் பயன்படுத்தப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதனை அரசியல் கட்சி முகவர்கள் ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பழனி விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் சேர்க்கப்படாது என அவர் உறுதி அளித்தார். மேலும் அதற்கான தேர்தல் நடைமுறைகளை விளக்கி அவர் கூறினார். அதன்பின் வாக்குச்சாவடி முகவர்கள் சமாதானமடைந்தனர்.

இதற்கிடையில் இந்த சம்பவத்தினால் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. காலை 8 மணி முதல் காலை 9.30 மணி வரை வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பின் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வாக்குச்சாவடி மையத்தின் அருகே திருக்காம்புலியூர் கூட்டுறவு சங்க தலைவரும், அ.தி.மு.க. பிரமுகரான செல்வமணியின் வீடு உள்ளது. இவரது வீட்டில் அ.தி.மு.க. பிரமுகர்கள் ஒன்று கூடி நின்றிருந்தனர். அப்போது அ.தி.மு.க.வினர் வாக்குசேகரிப்பில் ஈடுபடுவதாக கூறி அவர்களிடம் தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்தவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றதால் சகஜ நிலை திரும்பியது. இதற்கிடையில் திருக்காம்புலியூர் வாக்குச்சாவடி மையத்தில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதாக தகவல் பரவியதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story