அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 18 April 2019 10:30 PM GMT (Updated: 18 April 2019 8:49 PM GMT)

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் பின்னர் ஒவ்வொரு நாளும் பகலில் பல்லக்கிலும், இரவில் நந்தி, பூதம், வெள்ளி ரிஷப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்கள் மற்றும் புஷ்பபல்லக்கில் சுரும்பார்குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் . தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.

தேரோட்டம்

இதையொட்டி நேற்று சுரும்பார்குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். காலை 6 மணிக்கு தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அப்போது ஒவ்வொரு வீதியிலும் கூடிநின்ற பொதுமக்கள் சுவாமிகளை வழிபட்டனர்.

தேரோட்டத்தையொட்டி இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. விவசாயிகள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களை கோவில் தேரிலும், தேர் செல்லும் பகுதிகளிலும் கொட்டினர். நேற்று காலை இழுக்கப்பட்ட தேர் நாளை (சனிக்கிழமை) மாலை நிலையை அடைய உள்ளது. இந்த தேரோட்டத்தில் கோவில் குடிபாட்டுக்காரர்கள், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், குளித்தலை சுற்றுவட்டார கிராமமக்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Next Story