திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல்: பல வாக்குச்சாவடிகளில் மின்னணு எந்திரங்கள் கோளாறு 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு


திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல்: பல வாக்குச்சாவடிகளில் மின்னணு எந்திரங்கள் கோளாறு 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 April 2019 10:45 PM GMT (Updated: 18 April 2019 8:54 PM GMT)

திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு எந்திரங்கள் கோளாறு காரணமாக, வாக்காளர்கள் காத்திருந்து ஓட்டுப்போட்டனர். அப்போது 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், கந்தர்வகோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. இறுதி வாக்காளர் பட்டியலின் படி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 8 ஆயிரத்து 963 ஆகும். இவர்கள் வாக்களிப்பதற்காக 1,660 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்கு தேவையான மின்னணு எந்திரங்கள் மற்றும் அனைத்து வகையான பொருட்களும் நேற்று முன்தினம் மாலையே அனுப்பி வைக்கப்பட்டு வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் இருந்தன.

நேற்று காலை 6 மணி அளவில் வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்டு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் அலுவலர்கள் தங்களது பணியை தொடங்கினர். வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் உள்ளே வந்து அமர்ந்து இருந்தனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியான நிலையில் தான் உள்ளன என்பதை உறுதிபடுத்துவதற்காக முதலில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது.

எந்திரங்களில் கோளாறு

திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண்:60-ல் வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு எந்திரம் பழுதானது. காரணம், பேட்டரி சார்ஜ் இறங்கி விட்டது. இதனால், சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. பழுது சரிசெய்யப்படும் வரை, வாக்காளர்கள் அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து காத்திருந்து வாக்களித்தனர்.

திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி ஒன்றில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுதானது. உடனடியாக அதிகாரிகள் மாற்று எந்திரம் கொண்டு வந்தனர். சிறிது நேரத்திற்கு பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது.

மயங்கி விழுந்த பெண்

திருச்சி உறையூரில் ஆல் செயின்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அப்போது வரிசையில் நின்ற உறையூரை சேர்ந்த செல்வகுமாரி(வயது52) என்ற பெண் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

திருச்சி தீரன்நகரில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் காலை 8.45 மணிக்கு மின்னணு எந்திரம் ஒன்று பழுதானது. இதனால், சுமார் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. திருப்பராய்த்துறை விவேகானந்தர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் இயங்காததால் 45 நிமிடம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது. இதுபோல பெட்டவாய்த்தலை அருகே காமநாயக்கன் பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு எந்திரம் பழுதால் 50 நிமிடம் காத்திருந்து வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்தனர்.

திருவெறும்பூர்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாய்லர் ஆலை குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு வாக்குச்சாவடி மற்றும் தேவராயநேரி நரிக்குறவர் காலனி சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த 285-வது வாக்குச்சாவடியில் உள்ள எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி சிருஷ்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மாற்று எந்திரம் கொண்டு வரப்பட்டு 2 மணி நேரத்துக்கு பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது வாக்களிக்க வந்த ரவி(55) என்பவர் மயங்கி விழுந்தார். அவர், துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும், வாழவந்தான்கோட்டை பகுதிக்கு உட்பட்ட அய்யம்பட்டியில் உள்ள 276 மற்றும் 277-வது வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர் சிலிப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் தங்களது பெயர் எங்கு இடம் பெற்றுள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.

கோப்பு ஊராட்சி

திருச்சி அருகே கோப்பு ஊராட்சியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்தது. பின்னர் அந்த எந்திரம் சரிசெய்யப்பட்டு, ½ மணி நேரத்திற்கு பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது. பின்னர் வாக்குப்பதிவு எந்திரம் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.

பொன்மலைப்பட்டி

திருச்சி 36-வது வார்டு பொன்மலைப்பட்டியில் உள்ள ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் 2 வாக்கு பதிவு எந்திரங்கள் பழுதடைந்தன. இதனால், அங்கு சுமார் 1 மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது. காட்டூரில் உள்ள ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 81 மற்றும் 85 ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் எந்திர கோளாறு ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது.

சோமரசம்பேட்டை

சோமரசம்பேட்டை அருகே உள்ள நாச்சிக்குறிச்சி மானிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 4 வாக்குச்சாவடி மையங்களில் 220-வது வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக வாக்குப்பதிவு எந்திரத்தை அலுவலர்கள் தயார் படுத்தியபோது எந்திரம் வேலை செய்யவில்லை. இதனால், வாக்கு அளிக்க வந்தவர்கள் நீண்டநேரம் காத்திருந்தனர். பின்னர் மாற்று எந்திரம் வரவழைக்கப்பட்டு 9 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.

மண்ணச்சநல்லூர்

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி, மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பைஞ்சீலி, அழகிய மணவாளம், அக்கரைப்பட்டி, கல்பாளையம் உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதமானது.

மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற வாக்காளர் ஒருவர், விரலில் மை வைத்த பின்னர் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டு திடீரென்று வெளியேறினார்.

முசிறி

முசிறியில் பெரும்பாலான வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தாமதமானது. அவைகள் உடனடியாக சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

Next Story