குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் கள்ள ஓட்டு பதிவானதால் பரபரப்பு


குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் கள்ள ஓட்டு பதிவானதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 April 2019 10:30 PM GMT (Updated: 18 April 2019 9:12 PM GMT)

குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் கள்ள ஓட்டு பதிவானதாக பரபரப்பு ஏற்பட்டது.

பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே பிலாங்காலையில் உள்ள ஜோசப் உயர்நிலைப்பள்ளி வாக்குசாவடியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆண்களும், பெண்களும் ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடந்து கொண்டிருந்தது. வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரம் கடந்து முளகுமூடு சாணிக்குடியை சேர்ந்த ஷாஜி (வயது 42) என்பவர் வாக்களிக்க சென்றார். அங்கு அவரது வாக்கை இன்னொருவர் பதிவு செய்து இருந்ததாக தெரிகிறது. இதைக்கண்டு ஷாஜி அதிர்ச்சி அடைந்தார். அதுமட்டும் அல்லாமல் தேர்தல் பணியில் இருந்த ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக ஷாஜிவை அங்கிருந்தவர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஷாஜியின் மனைவி அதே வாக்குப்பதிவு மையத்தில்தான் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி முகவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கண்காணிப்பையும் மீறி ஷாஜியின் ஓட்டை இன்னொருவர் பதிவு செய்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே வாக்குச்சாவடியில் கல்லுவிளையை சேர்ந்த அஜின்மோன் (25) என்பவர் வாக்களிக்க வந்தார். அவரது ஓட்டையும், இன்னொருவர் பதிவு செய்து இருந்தார். இதனால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் பணியில் உள்ள ஊழியர்களின் கவனக்குறைவால்தான் தனது ஓட்டை இன்னொருவர் பதிவு செய்து விட்டதாக அஜின்மோன் குற்றம் சாட்டினார். இந்த சம்பவங்கள் தொடர்பாக சப்-கலெக்டர் சரண்யாவிடம், ஷாஜி, அஜின்மோன் ஆகிய இருவரும் புகார் மனு கொடுத்தனர். அதன்பேரில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சப்-கலெக்டர் சரண்யா நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

மண்டைக்காடு கீழ்க்கரை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 33), தொழிலாளி. இவர் நேற்று மதியம் மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போடுவதற்காக சென்றார். அங்கு வாக்குச்சாவடிக்கு உள்ளே இருந்த முகவர்கள் அவரது சிலிப்பை பார்த்துவிட்டு காலையிலேயே ஓட்டு பதிவாகி விட்டது என்று கூறினார்கள். அதைகேட்டு அய்யப்பன் அதிர்ச்சி அடைந்தார். நான் இப்போதுதான் ஓட்டு போட வந்துள்ளேன். எனது ஓட்டை யாரோ கள்ள ஓட்டாக போட்டுள்ளனர் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே, அங்கிருந்த தேர்தல் பார்வையாளர்கள் விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அய்யப்பனை ‘டெண்டர்’ஓட்டு போடும்படி அறிவுறுத்தினர். அதன்படி அய்யப்பன் தனது வாக்கை பதிவு செய்து விட்டு அங்கிருந்து சென்றார். குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் கள்ள ஒட்டு பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story