நாடாளுமன்ற தேர்தலில் ஆர்வமுடன் ஓட்டுப்போட்ட இளம் வாக்காளர்கள் ‘ஜனநாயக கடமையாற்றியது பெருமிதம் அளிக்கிறது’ என்கிறார்கள்


நாடாளுமன்ற தேர்தலில் ஆர்வமுடன் ஓட்டுப்போட்ட இளம் வாக்காளர்கள் ‘ஜனநாயக கடமையாற்றியது பெருமிதம் அளிக்கிறது’ என்கிறார்கள்
x
தினத்தந்தி 19 April 2019 4:15 AM IST (Updated: 19 April 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டுப்போட்டனர். ஜனநாயக கடமையாற்றியது பெருமிதம் அளிக்கிறது என்று இளம் வாக்காளர்கள் தெரிவித்தனர்.

பெங்களூரு, 

நாடாளுமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டுப்போட்டனர். ஜனநாயக கடமையாற்றியது பெருமிதம் அளிக்கிறது என்று இளம் வாக்காளர்கள் தெரிவித்தனர்.

இளம் வாக்காளர்கள் ஆர்வம்

கர்நாடகத்தில் முதல்கட்டமாக பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு, மத்திய பெங்களூரு, மண்டியா உள்பட 14 தொகுதிகளுக்கு நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அனைவரும் கண்டிப்பாக ஓட்டுப்போட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தது. அதன்படி, வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். குறிப்பாக இந்த தேர்தலில் முதல் முறையாக ஓட்டுப்போட தகுதி பெற்றவர்கள் வாக்களிக்க மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.

காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையாற்றினார்கள். பெங்களூரு நகரிலும் இளம் வாக்காளர்கள் தங்களது கன்னி வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றுவதில் ஆர்வம் காட்டினார்கள். முதல் முறையாக ஜனநாயக கடமையை ஆற்றியது பெருமிதமாக உள்ளதாக இளம் வாக்காளர்கள் தெரிவித்தனர்.

ஆர்வமாக இருந்தேன்

பெங்களூரு காட்டன் பேட்டை அருகே வசிக்கும் மாணவி கீர்த்தனா கூறும் போது, ‘நான் தனியார் கல்லூரியில் பி.காம். 2-வது ஆண்டு படித்து வருகிறேன். முதல் முறையாக ஓட்டுப்போடும் தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் முறையாக ஓட்டுப்போட ஆர்வமாக இருந்தேன்.

தற்போது ஓட்டுப்போட்டு எனது ஜனநாயக கடமையாற்றியது பெருமிதமாக இருக்கிறது. ஓட்டுப்போட்டது எனக்கு மிகுந்த மன திருப்தியை தந்துள்ளது. ஒவ்வொருவரும் தங்களது ஓட்டுரிமையை பயன்படுத்தி கொள்ள வேண்டும். நான் பயன்படுத்தி கொண்டுள்ளேன்,’ என்றார்.

ஆசை நிைறவேறி இருக்கிறது

இதுபோல, கேம்பிரிட்ஜ் ரோட்டை சேர்ந்த பி.எஸ்.சி. 3-வது ஆண்டு படிக்கும் மாணவியான சோனு கூறும் போது, ‘முதல் முறையாக ஓட்டுப்போடுவது புதிய அனுபவமாக உள்ளது. ஓட்டுப்போட வேண்டும் என்று நிறைய எதிர்பார்ப்புகளுடனும், ஆசையுடனும் இருந்தேன். அது நிறைவேறி இருக்கிறது. ஜனநாயக கடமையாற்றிருப்பது சந்தோஷமாக உள்ளது,’ என்றார்.

பி.யூ.சி. 2-வது ஆண்டு படிக்கும் மாணவியான காட்டன் பேட்டையை சேர்ந்த ஹர்சிதா கூறுகையில், ‘எனக்கு ஓட்டுப்போடும் உரிமை கிடைத்திருப்பதன் மூலம், இளம் வயதை அடைந்திருப்பதாக உணருகிறேன். ஓட்டுப்போட்டது நல்ல அனுபவமாக கருதுகிறேன். வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது. இது ஒரு நல்ல செய்தி. இதை நான் வரவேற்கிறேன்’ என்றார்.

Next Story