முதுமலையில், சாலையோரம் உலா வந்த கரடியால் பரபரப்பு
முதுமலையில் சாலையோரம் கரடி திடீரென உலா வந்தது. இதனை சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் கண்டு ரசித்தனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது.
கூடலூர்,
கூடலூர், முதுமலை பகுதியில் கோடை வறட்சியால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேபோல் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வழக்கமாக மார்ச் மாதம் கோடை மழை அடிக்கடி பெய்வது வழக்கம். ஆனால் நடப்பு ஆண்டில் கோடை மழை பெய்வதற்கு காலதாமதம் ஆகியது. இதனால் நீர்நிலைகள் விரைவாக வறண்டது.
பச்சை தேயிலை விளைச்சல் பாதித்தது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் கோடை மழை பெய்யுமா என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கூடலூர், முதுமலை பகுதியில் பரவலாக கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்துள்ளது.
வறட்சியால் முதுமலை வனத்தில் வனவிலங்குகள் நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது. தற்போது கோடை மழை பெய்துள்ளதால் வனத்தில் பசுந்தீவனம் வளர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டு யானைகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
நேற்று மாலை முதுமலை தெப்பக்காட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் சிலர் காரில் கூடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது கார்குடி பகுதியில் உள்ள சாலையோர புதர்களுக்கு இடையே இருந்து திடீரென கரடி ஒன்று வெளியே வந்தது. இதைக்கண்ட சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் கரடியை கண்டு ரசித்தனர். தொடர்ந்து தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர்.
பின்னர் சாலையை கடந்தவாறு கரடி அங்கிருந்து சென்றது. கரடியை திடீரென கண்டதால் சுற்றுலா பயணிகள் இடையே சிறிது பரபரப்பும் ஏற்பட்டது. பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியவாறு அங்கிருந்து சென்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே முதுமலை, கூடலூர் வனத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரும். இல்லை எனில் வறட்சியின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்கு வாய்ப்பு இல்லை. வனவிலங்குகள் எதிர்பாராதவிதமாக சாலையோரம் வந்தாலும் சுற்றுலா பயணிகள் எந்தவித இடையூறு செய்யக்கூடாது. காட்டு யானைகள், கரடிகள் திடீரென தாக்கும் தன்மை உடையவை. இதனால் ஆபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முதுமலை சாலையில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story