குன்னூர் அருகே, காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்


குன்னூர் அருகே, காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 18 April 2019 10:30 PM GMT (Updated: 18 April 2019 9:43 PM GMT)

குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

குன்னூர், 

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் சுராஜ் (வயது 30). இவர் குன்னூர் அருகே உள்ள கிளண்டேல் பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சுராஜ் தனியார் தேயிலை தோட்ட குடியிருப்பில் வசித்து வருகிறார்.

நேற்று காலை சுராஜ் ரன்னிமேடு பகுதியில் உள்ள தேயிலை நர்சரி அருகில் விறகு சேகரிக்க சென்றார். பின்னர் அங்கிருந்து விறகு எடுத்துக்கொண்டு குடியிருப்பு பகுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது தொழிலாளியின் பின்னால் வந்த ஒற்றை காட்டெருமை அவரை முட்டி தூக்கி வீசியது.

காட்டெருமை தாக்கியதில் தொழிலாளிக்கு நெஞ்சு, வயிறு, முதுகு போன்ற இடங்களில் படுகாயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு தொழிலாளிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து குன்னூர் வனச்சரகர் பெரியசாமி விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story