நாடாளுமன்ற தேர்தல், கடலூர் தொகுதியில் வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டுப்போட்டனர் - 73.64 சதவீத வாக்குகள் பதிவானது


நாடாளுமன்ற தேர்தல், கடலூர் தொகுதியில் வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டுப்போட்டனர் - 73.64 சதவீத வாக்குகள் பதிவானது
x
தினத்தந்தி 19 April 2019 3:45 AM IST (Updated: 19 April 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டுப்போட்டனர். இதில் 73.64 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

கடலூர்,

கடலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் தி.மு.க., பா.ம.க., அ.ம.மு.க., மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 21 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தேர்தல் பிரசாரம் 16-ந்தேதி மாலையுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

வாக்குப்பதிவுக்காக இத்தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,499 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த வாக்குச்சாவடிகளில் 12 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். துணை ராணுவத்தினர் உள்பட 4 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை 6 மணிக்கு வாக்குச்சாவடிகளில் முதல் கட்டமாக மாதிரி வாக்குப்பதிவு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடந்தது. இதில் வேட்பாளர்களின் முகவர்கள் 50 ஓட்டுகள் பதிவு செய்தனர். மாதிரி வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாட்டை உறுதி செய்து விட்டு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

ஆனால் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாகவும், வாக்குச்சாவடி அலுவலர்கள் செய்த தவறின் காரணமாகவும் வாக்குப்பதிவு தாமதமாகவே தொடங்கியது.

தொரப்பாடியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகளை அழிக்காமலேயே வாக்குப்பதிவை தொடர்ந்தனர். இதனால் அங்கு தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

நெல்லிக்குப்பத்தில் 2 வாக்குச்சாவடிகள் மற்றும் ராமநத்தம் அருகே பெரங்கியத்தில் ஒரு வாக்குச்சாவடி மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. இதேபோல் கடலூர் புதுப்பாளையம், முதுநகர், செம்மண்டலம் உள்ளிட்ட இடங்களிலும் சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

கலெக்டர் அன்புசெல்வன் ஓட்டுப்போட்ட கடலூர் மஞ்சக்குப்பம் ஜெயலட்சுமி நாயுடு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 7 மணிக்கு தான் மாதிரிவாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதன் காரணமாக 40 நிமிடங்கள் தாமதமாக 7.40 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியது.

இதனால் கலெக்டர் அன்புசெல்வன் வாக்காளர்களுடன் வரிசையில் 15 நிமிடங்கள் காத்து நின்று வாக்களித்தார். இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் 2,300 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு சுமூகமாக நடக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 8 வாக்குச்சாவடிகளில் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது என்றார்.

ஆனால் வாக்குப்பதிவை பொறுத்தவரை காலையில் மந்தமாக இருந்தாலும் நேரம் போக, போக வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். இளம்வாக்காளர்கள் முதல்முறையாக ஓட்டு போட்டனர். முத்துகிருஷ்ணாபுரம் வாக்குச்சாவடியில் இளைஞர்கள் ஆர்வமுடன் வந்து தங்களின் முதல்வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்கள்.

பேர்பெரியான்குப்பத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மதியம் ஒரு மணி அளவிலேயே வாக்குப்பதிவு 50 சதவீதத்தை தாண்டியது. நெய்வேலியில் உள்ள வாக்குச்சாவடிகளில் மதியம் வரை வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது, பிற்பகலில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை முடிந்து வந்த பின் வாக்குச்சாவடிகளில் கூட்டம் காணப்பட்டது.

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு விவரங்களை ஒவ்வொரு 2 மணி நேர இடைவெளியில் தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டார். அதன்படி காலை 9 மணி நிலவரப்படி 5 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தது. காலை 11 மணி நிலவரப்படி 20 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

மதியம் ஒரு மணி நிலவரப்படி 36 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தது. இதில் அதிகபட்சமாக திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 45.92 சதவீதமும், குறைந்தபட்சமாக குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் 21.50 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தது.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 56.2 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக நெய்வேலி தொகுதியில் 49.41 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தது.

மாலை 5 மணி நிலவரப்படி 63.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் அதிகபட்சமாக விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் 67 சதவீத வாக்குகளும், குறைந்த பட்சமாக பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் 57.53 சதவீத வாக்குகளும் பதிவானது.

மாலை 6 மணிக்கு பிறகும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்காக காத்து நின்றதால் அவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு, 6 மணிக்கு பிறகும் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் வாக்குப்பதிவு இறுதி நிலவரம் 8 மணிக்கு மேல் வெளியானது. அதன்படி கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் 73.64 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த நிலையில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு வாக்குச்சாவடிகளில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான பெரியார் அரசு கலைக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு பாதுகாப்பு அறைகளில் சட்டமன்ற தொகுதிவாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அடுத்த மாதம்(மே) 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்று கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதி யார்? என்பது வெளியாகும். 
1 More update

Next Story