திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் கிரிவல பக்தர்கள் ‘திடீர்’ சாலை மறியல்


திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் கிரிவல பக்தர்கள் ‘திடீர்’ சாலை மறியல்
x
தினத்தந்தி 19 April 2019 10:15 PM GMT (Updated: 19 April 2019 4:44 PM GMT)

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் கிரிவலம் வந்த பக்தர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் வருவார்கள்.

சித்ரா பவுர்ணமி நேற்று முன்தினம் இரவு 7.05 மணிக்கு தொடங்கி நேற்று மாலை 5.35 மணிக்கு நிறைவடைந்தது. கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் 2,900 சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு இருந்தது.

ஆனால் நேற்று முன்தினம் இரவு கிரிவலம் முடித்தவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாமல் நேற்று அதிகாலை அனைத்து தற்காலிக பஸ் நிலையங்களிலும் காத்திருந்து அவதிப்பட்டனர். குறிப்பாக திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்காக திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது.

கிரிவலம் சென்று முடித்தவர்கள் சென்னை மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு செல்ல தற்காலிக பஸ் நிலையத்தில் நேற்று காலையில் குவிந்தனர். ஆனால் திண்டிவனம், செஞ்சி வழியாக சென்னை செல்ல போதிய பஸ்கள் இயக்காததால் பக்தர்கள் திடீரென திண்டிவனம் பைாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அங்கு வந்த அனைத்து பஸ்களையும் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் பஸ்சின் மேற்கூரையில் அமர்ந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.

சாலை மறியல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சரி செய்து வாகனங்களை இயக்க முயற்சி செய்தனர். அப்போது அதிக ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி புறப்பட்ட பஸ் ஒன்று திடீரென சாலையின் ஓரத்தில் கவிழ்வது போன்று சென்றது.

டிரைவரின் சாமர்த்தியத்தால் பஸ் நிறுத்தப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர். மேலும் போக்குவரத்து கழகத்தினரும் சம்பவ இடத்திற்கு சென்று சென்னை செல்வதற்கான பஸ் ஏற்பாடுகளை செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story