காரிமங்கலம் அருகே துணிகரம் ரூ.1 லட்சம் பழைய மின்கம்பிகள் திருட்டு போலீசார் விசாரணை


காரிமங்கலம் அருகே துணிகரம் ரூ.1 லட்சம் பழைய மின்கம்பிகள் திருட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 April 2019 10:15 PM GMT (Updated: 19 April 2019 5:13 PM GMT)

காரிமங்கலம் அருகே ரூ.1 லட்சம் மதிப்புள்ள பழைய மின்கம்பிகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரிமங்கலம், 

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பெரிய மிட்டஅள்ளியில் இருந்து பைசுஅள்ளி துணை மின் நிலையம் வரையிலான மின் கம்பங்களில் உள்ள பழைய மின் கம்பிகளை மாற்றும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களில் இருந்து கழற்றப்பட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான மின் கம்பிகளை பெரியமிட்டஅள்ளி பகுதியில் ஒருவரின் வீட்டு முன்பு வைத்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த வீட்டின் உரிமையாளர் ஓட்டளிக்க வாக்குச் சாவடிக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பியபோது அங்கு வைக்கப்பட்டிருந்த பழைய மின்கம்பிகள் திருட்டு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது வாக்களிக்க சென்றதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் இந்த மின் கம்பிகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இந்த துணிகர திருட்டு சம்பந்தமாக தர்மபுரி மின் வாரிய உதவி பொறியாளர், காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல், திருட்டு நடந்த இடத்தில் பணிபுரிந்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருட்டு போன மின் கம்பிகளின் மதிப்பு ரூ.1 லட்சம் என மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

Next Story