வாக்குச்சாவடியில் அ.தி.மு.க.-கம்யூனிஸ்டு கட்சியினர் மோதல் விவகாரம்: புகார் தெரிவித்தால் நடவடிக்கை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்


வாக்குச்சாவடியில் அ.தி.மு.க.-கம்யூனிஸ்டு கட்சியினர் மோதல் விவகாரம்: புகார் தெரிவித்தால் நடவடிக்கை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 19 April 2019 11:00 PM GMT (Updated: 19 April 2019 6:54 PM GMT)

திருப்பூரில் வாக்குச்சாவடியில் அ.தி.மு.க.-கம்யூனிஸ்டு கட்சியினர் மோதல் சம்பவம் தொடர்பாக புகார் தெரிவித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேற்று பாராட்டு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. குறிப்பாக கடந்த 1 வாரமாக இரவு, பகல் பாராமல் தேர்தல் பணியாற்றிய உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அனைத்து ஊழியர்களும், காவல்துறை உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவ வீரர்கள், ஆயுதப்படையினர், உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

பல்லடம் அருகே வெங்கிட்டாபுரத்தில் மின்மயானம் அமைக்கக்கோரி ஒரு தரப்பினர் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் நடந்த நேற்று முன்தினம் வெங்கிட்டாபுரத்தை சேர்ந்த மக்கள், தங்கள் பகுதியில் மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்களிக்காமலும், வாக்களிக்க வந்தவர்களை தடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்ததும் மாவட்ட வருவாய் அதிகாரி சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எங்களுக்கு உரியகால அவகாசம் கொடுக்காமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் பேசியதில் சிலர் வாக்களித்தனர். அந்த வாக்குச்சாவடியில் 1,091 வாக்குகள் உள்ளன. 103 வாக்குகள் பதிவாகியுள்ளது. அங்கு பிரச்சினையின்றி வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

திருப்பூர் முருங்கப்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரிடையே மோதல் தொடர்பாக இதுவரை புகார் வரவில்லை. சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் உள்ள தலைமை வாக்குச்சாவடி அலுவலர் அங்கு நடக்கும் நிகழ்வை குறிப்பெடுப்பது வழக்கம். அவர் முறைப்படி புகார் தெரிவித்தால் தேர்தல் ஆணைய நடைமுறைக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் தாக்கப்பட்டவர் தரப்பில் எழுத்து பூர்வமாக புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வெள்ளகோவிலில் ஒரு வாக்குச்சாவடியில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் மாறுபாடு இருப்பதாக தகவல் தெரிவிக்கிறார்கள். தலைமை வாக்குச்சாவடி அலுவலர், அங்குள்ள வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் ஆகியோர், பதிவான வாக்குகள் குறித்து குறிப்பெடுத்து இருப்பார்கள். வாக்கு எண்ணும் போது அதுகுறித்து தெரிவிக்கப்பட்டால் தேர்தல் ஆணைய விதிமுறைக்கு உட்பட்டு மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.

Next Story