நெல்லை, தென்காசி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம் அரசியல் கட்சியினர் முன்னிலையில் ‘சீல்’ வைப்பு
நெல்லை, தென்காசி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு, அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று ‘சீல்‘ வைக்கப்பட்டது.
நெல்லை,
நெல்லை, தென்காசி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையம் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு, அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று ‘சீல்‘ வைக்கப்பட்டது.
என்ஜினீயரிங் கல்லூரி
நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த சட்டசபை தொகுதிகளில் 1,796 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. ஒரு சில வாக்குச்சாவடிகளில் டோக்கன் கொடுக்கப்பட்டது. அதனால் இரவு வரை வாக்குப்பதிவு நீடித்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அதற்குரிய பெட்டிகளில் வைத்து ‘சீல்‘ வைக்கப்பட்டன. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரி மற்றும் வேன்களில் ஏற்பட்டது. அந்தந்த பகுதி மண்டல அலுவலர்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று காலை வரை வாக்குப்பதிவு எந்திரங்களை மண்டல அலுவலர்கள் கொண்டு வந்தனர்.
‘சீல்’ வைப்பு
வாக்கு எண்ணும் மையமான நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சட்டசபை தொகுதி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்கு எண்ணும் மையம் நேற்று பூட்டி ‘சீல்‘ வைக்கப்பட்டது. அரசியில் கட்சியினர் முன்னிலையில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வாக்கு எண்ணும் மையத்துக்கு ‘சீல்‘ வைத்தார். அப்போது அ.தி.மு.க. சார்பில் வக்கீல் மோகன்ராஜ், தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் மகன் ராஜா, காங்கிரஸ் கட்சி கட்சியை சேர்ந்த வி.பி.துரை, அ.ம.மு.க. வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உடன் இருந்தனர். ஒரு சட்டசபை தொகுதிக்கு 3 கேமராக்கள் வீதம் 18 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையில் உள்ள அகன்ற திரை டி.வி.யில் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தென்காசி
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான ஓட்டுகளை கொண்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டமன்ற தொகுதிகளான தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 தொகுதிகளில் பதிவான ஓட்டுகளை கொண்ட எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனித்தனியாக வைக்கப்பட்டன. நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் முன்னிலையில் இந்த அறைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டன. அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இந்த வாக்கு எண்ணும் மையத்தில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு அறை வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story