முதுமலை ஊராட்சியில், சூறாவளி காற்றுக்கு வாழைகள் சாய்ந்தன - விவசாயிகள் கவலை


முதுமலை ஊராட்சியில், சூறாவளி காற்றுக்கு வாழைகள் சாய்ந்தன - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 19 April 2019 10:00 PM GMT (Updated: 19 April 2019 7:36 PM GMT)

முதுமலை ஊராட்சியில் சூறாவளி காற்றுக்கு வாழைகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் கடந்த மாதம் முதல் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் பச்சை புற்கள் காய்ந்து காட்டுத்தீ பரவியது. இதில் கூடலூர், முதுமலை வனப்பகுதியில் சில நூறு ஏக்கர் பரப்பளவு தீயில் கருகியது. மேலும் வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடும் வறட்சியால் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டது. இருப்பினும் கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சி பகுதியில் உள்ள விவசாயிகள் வறட்சியிலும் நேந்திரன் வாழை விவசாயத்தில் ஈடுபட்டனர்.

கோடை மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் சில மாதங்களுக்கு முன்பு வாழைகள் பயிரிட்டனர். தற்போது நன்கு விளைந்து சில வாரங்களில் அறுவடை செய்யும் வகையில் வாழைத்தார்கள் விளைந்து இருந்தன. இந்த நிலையில் முதுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் தாக்கத்தால் கூடலூர் பகுதியிலும் சாரல் மழை பெய்தது. கடந்த 17-ந் தேதி இரவு முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

இதனால் வறட்சி நீங்கி வனப்பகுதி பசுமைக்கு திரும்பும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்தது. அப்போது கூடலூர் 2-ம் மைல் பகுதியில் உயர் கோபுர மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தொடர்ந்து பலத்த காற்று வீசியதால் முதுமலை ஊராட்சி கல்லஞ்சேரி, கோலிமலை, முதுகுளி உள்ளிட்ட கிராமங்களில் பயிரிட்டு இருந்த வாழைகள் பாதியில் முறிந்து சாய்ந்தன.

இதில் கல்லஞ்சேரியை சேர்ந்த சிவன், கோலிமலையை சேர்ந்த வள்ளி, குட்டி கிருஷ்ணன், மேல முதுகுளியை சேர்ந்த லீலா உள்பட பல விவசாயிகளின் வாழைகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன. இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலையுடன் கூறினர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக நிலவி வந்த கோடை வறட்சியிலும் கடும் பாடுபட்டு வளர்த்த வாழைகள் திடீரென வீசிய சூறாவளி காற்றில் சாய்ந்து விழுந்து விட்டன. முதுமலை ஊராட்சியில் மட்டும் 5 ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வருவாய் துறையினர் உரிய ஆய்வு நடத்தி பாதிக்கப்பட்ட எங்களுக்கு இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதேபோல் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story