குடிநீர் வழங்க வலியுறுத்தி வெங்கத்தான்குடியில் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
குடிநீர் வழங்க வலியுறுத்தி வெங்கத்தான்குடியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே வெங்கத்தான்குடி ஊராட்சி 1-வது வார்டு கிழக்கு ஆற்றங்கரை தெருவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தென்பரை பாமணி ஆற்று படுகையில் அமைந்துள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கெழுவத்தூர், வேதபுரம் வழியாக வெங்கத்தான்குடி ஊராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏற்றி அதன் மூலம் கிழக்கு ஆற்றங்கரை தெருவில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கைப்பம்பு மூலம் கிடைக்க கூடிய உப்பு நீரை தான் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், உடனடியாக குடிநீர் வழங்க வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் நேற்று வெங்கத்தான்குடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் குமார், தி.மு.க. பிரமுகர் ராஜ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுமக்கள் சாலையில் கயிற்றை கட்டி காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த களப்பால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறினர்.
அதைதொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி -வேதபுரம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story