வெளியூர்களுக்கு செல்ல பஸ்கள் இல்லாததால் பயணிகள் சாலை மறியல் - விழுப்புரம் பஸ் நிலையத்தில் பரபரப்பு


வெளியூர்களுக்கு செல்ல பஸ்கள் இல்லாததால் பயணிகள் சாலை மறியல் - விழுப்புரம் பஸ் நிலையத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 20 April 2019 3:45 AM IST (Updated: 20 April 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

வெளியூர்களுக்கு செல்ல பஸ்கள் இல்லாததால் விழுப்புரம் பஸ் நிலையத்தில் நள்ளிரவில் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

நாடாளுமன்ற தேர்தலுக்காக சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்கள் நேற்று முன்தினம் தங்கள் சொந்த ஊருக்கு வாக்களிப்பதற்கு சென்றதால் அனைத்து பஸ் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, சேலம், வேலூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு போதுமான பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்திற்கு பிறகு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது.

இந்நிலையில் மேற்கண்ட ஊர்களுக்கு சென்று வாக்களித்த பொதுமக்கள் சிலர் இரவிலேயே அவரவர் பணியாற்றி வரும் இடங்களுக்கு புறப்பட்டனர். மேலும் சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை கோவிலில் கிரிவலத்தை முடித்துக்கொண்டும் பக்தர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

ஆனால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இரவிலும் சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பஸ் கிடைக்காமல் பல மணி நேரம் பஸ் நிலையத்திலேயே பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அவர்கள் மிகவும் அவதியடைந்தனர்.

இந்நிலையில் ஆத்திரமடைந்த பயணிகள் நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென பஸ் நிலைய நுழைவுவாயில் அருகில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார், பஸ் நிலையத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் உடனடியாக பஸ்கள் இயக்கப்பட்டால்தான் மறியலை கைவிடுவோம் என்று கூறியபடி பயணிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாலை 2.30 மணியளவில் பயணிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அந்த பஸ்களில் ஏறி பயணம் செய்தனர். நள்ளிரவில் நடந்த இந்த மறியல் போராட்டத்தினால் விழுப்புரம் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து நேற்று காலையிலும் இதே நிலைதான் நீடித்தது. இதனால் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதோடு பஸ் நிலையம் முழுவதும் பயணிகள் கூட்டம் நிரம்பிய நிலையில் இருந்தது. தொடர்ந்து அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பஸ்சில் ஏறி பயணம் செய்தனர்.

Next Story