பாலகோட்டில் ஓட்டு வங்கி இருக்கிறதா? என கேள்வி: பாகிஸ்தானின் எல்லை பற்றி எனக்கு தெரியாது பிரதமர் மோடிக்கு குமாரசாமி பதில்
பாலகோட்டில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஓட்டு வங்கி இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய பிரதமர் மோடிக்கு, பாகிஸ்தானின் எல்லை பற்றி எனக்கு தெரியாது என்று குமாரசாமி பதில் அளித்துள்ளார்.
பெங்களூரு,
பாலகோட்டில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஓட்டு வங்கி இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய பிரதமர் மோடிக்கு, பாகிஸ்தானின் எல்லை பற்றி எனக்கு தெரியாது என்று குமாரசாமி பதில் அளித்துள்ளார்.
மோடி கேள்வி
பாகல்கோட்டையில் நேற்று முன்தினம் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு பாகல்கோட்டையில் ஓட்டு வங்கி இருக்கிறதா? அல்லது பாலகோட்டில் ஓட்டு வங்கி இருக்கிறதா? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும்
கர்நாடகத்தில் விவசாய கடன் தள்ளுபடி குறித்து பிரதமர் மோடி குறை கூறி பேசுகிறார். மத்திய அரசின் கிசான் சம்மான் திட்டத்தில் கர்நாடக விவசாயிகளுக்கு உதவி வழங்கவில்லை. தகுதியான விவசாயிகளின் பெயர் பட்டியலை வழங்கவில்லை என்று மோடி சொல்கிறார். இணையதளத்தில் சென்று பார்த்தால், தெரியும். நான் ஆதாரம் இல்லாமல் பேசமாட்டேன்.
தண்ணீர் கொள்கை குறித்து மோடி இப்போது பேசுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜனதா ஆட்சி தானே இருந்தது. மோடி என்ன செய்து கொண்டிருந்தார்?. நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு கர்நாடக கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று மோடியே சொல்கிறார்.
விவசாய கடன் தள்ளுபடி
வட கர்நாடகத்திற்கு நான் துரோகம் செய்துவிட்டதாக பா.ஜனதாவினர் தவறான தகவலை வெளியிடுகிறார்கள். நான் ஆட்சிக்கு வந்த பிறகு வட கர்நாடகத்திற்கு அதிக திட்டங்களை அறிவித்துள்ளேன். விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் தார்வார் மாவட்டத்திற்கு மட்டும் இதுவரை ரூ.250 கோடி விடுவித்துள்ளேன்.
பாகிஸ்தானின் எல்லை பற்றி எனக்கு தெரியாது. கர்நாடக எல்லை பற்றி மட்டுமே எங்களுக்கு தெரியும். பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகளை தாக்கியதாக மோடி பெருமையாக பிதற்றிக்கொள்கிறார். வேறு பிரதமர்கள் நாட்டை ஆண்டபோது, இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவே இல்லையா?.
கடும் விமர்சனம்
இதற்கு முன்பு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு எதிராக போர் நடத்தவில்லையா?. எங்கள் மீது கடும் விமர்சனங்களை பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். அதற்கு மக்கள் இந்த தேர்தல் மூலம் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story