பூங்குன்றநாயகி அம்மன் கோவில் பூத்திருவிழா - மஞ்சுவிரட்டில் 10 பேர் காயம்


பூங்குன்றநாயகி அம்மன் கோவில் பூத்திருவிழா - மஞ்சுவிரட்டில் 10 பேர் காயம்
x
தினத்தந்தி 19 April 2019 10:45 PM GMT (Updated: 19 April 2019 9:37 PM GMT)

பூங்குன்றநாயகி அம்மன் கோவில் பூத்திருவிழாவையொட்டி நடந்த மஞ்சுவிரட்டில் 10 பேர் காயமடைந்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே பூங்குன்றநாடு என்று அழைக்கப்படும் நான்கு மங்கலத்தின் தலைநகரமான மகிபாலன்பட்டியில் பூங்குன்றநாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாத பவுர்ணமியையொட்டி பூத்திருவிழா மற்றும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் வேலங்குடி, சுண்டக்காடு, கண்டவராயன்பட்டி, வஞ்சினிப்பட்டி, நெற்குப்பை கீழத்தெரு ஆகிய 24 அரை கிராம மக்கள் மஞ்சுவிரட்டை முன்னிட்டு காலை நாட்டுப்பிள்ளையார் கோவிலில் ஒன்றுகூடி மாடுகளுக்கு வேட்டி, துண்டு வைத்து வணங்கி பூங்குன்றநாயகி அம்மன் கோவில் சென்று, அங்கிருந்து ஊர்வலமாக வந்தனர்.

தொடர்ந்து குடவரை கோவிலான குடகுமலை கோவிலில் வழிபாடு நடத்திய பின்பு, அருகில் அமைக்கப்பட்டுள்ள தொழுவத்தில் மாடுகளுக்கு வேட்டி வழங்கி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் தொழுவத்தில் இருந்து வாடிவாசல் வழியாக 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

முன்னதாக சுமார் 300-க்கும் மேற்பட்ட மாடுகள் வயல் மற்றும் கண்மாய்களில் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. மஞ்சுவிரட்டில் 24 அரை கிராமம் உள்ளிட்ட சுற்றுப்புர கிராமங்களைச் சேர்ந்த மாடுகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

Next Story