ராஜபாளையம் பகுதியில் இடி-மின்னலுடன் மழை - வீடு இடிந்து விழுந்து தொழிலாளி பலி
ராஜபாளையம் பகுதியில் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. இதில் வீடு இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இரவு நேரத்திலும் வெப்பத்தின் தாக்கம் இருந்ததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது.
சிறிது நேரத்தில் மழையின் தாக்கம் அதிகரித்து பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. சாலைகளில் எங்கு பார்த்தாலும் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நின்றதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தொடர்ந்து செல்ல முடியாமல் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். கன ரக வாகனங்களில் செல்வோர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்கினை எரிய விட்டபடியே சென்றனர். மேலும் பலத்த இடி-மின்னல் இருந்ததால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பலத்த மழையால் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா முதல் பழைய பஸ் நிலையம் வரை 50-க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்களுக்குள் மழைநீர் தேங்கி நின்றது.
ராஜபாளையம் அருகே உள்ள ஆவரம்பட்டி கிராமத்திலும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அந்த ஊரைச்சேர்ந்த மண் பானை தொழிலாளி ராமநாதன் (வயது70) தனது ஓட்டு வீட்டினுள் இருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் வீட்டின் மீது மின்னல் தாக்கியது.
இதில் வீடு இடிந்து வீட்டின் மரச்சட்டம் ராமநாதனின் மேல் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த
சம்பவம் குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோடைமழை கொட்டித்தீர்த்து அனைவரையும் மனம் குளிரச்செய்திருந்த நிலையில் தொழிலாளி உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story