கொட்டாம்பட்டியில் 3 இடங்களில் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
கொட்டாம்பட்டியில் 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
கொட்டாம்பட்டி,
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிடப்பட்டதாக தெரிகிறது. இதை கண்டித்தும், இதற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும் நேற்று கொட்டாம்பட்டி அருகே உள்ள புழுதிபட்டி பகுதி மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் சமரசத்தை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும் கொட்டாம்பட்டி பழைய காவல் நிலையம் அருகே உள்ள சாலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்
இதற்கிடையில் கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். மறியலால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்கள் சமூக வலைத்தளத்தில் ஒரு சமூகத்தினரை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும். இல்லையெனில் கொட்டாம்பட்டியில் மிகப்பெரிய அளவில் மறியல் போராட்டம் நடைபெறும் என கூறினர்.
Related Tags :
Next Story