தேவூர் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதம் விவசாயிகள் கவலை
தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேவூர்,
தேவூர் அருகே கோணக்கழுத்தானூர், அருமைக்காரர் தோட்டம், ஓடசக்கரை, சின்னாம்பாளையம், அம்மாபாளையம், தண்ணிதாசனூர், காவேரிப்பட்டி, ஒக்கிலிப்பட்டி, பெரமாச்சிபாளையம், கோனேரிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.
இந்த நிலையில் தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்றடன் கனமழை பெய்தது. இந்த மழைக்கு கோணக்கழுத்தானூர், அருமைக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி ராசு என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஆயிரம் வாழை மரங்கள், அதே பகுதியில் நல்லாக்கவுண்டர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 500 வாழை மரங்கள், அம்மாபாளையம் சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 100 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.
இதேபோல கோனேரிப்பட்டி அக்ரஹாரம் கல்வடங்கம், காவேரிப்பட்டி கிராமம் ஒக்கிலிப்பட்டி, தண்ணிதாசனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகளின் தோட்டத்தில் 3 ஆயிரத்து 400 வாழை மரங்கள் என மொத்தம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமானது. இதனால் வாழை பயிரிட்டு இருந்த விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர்.
இதேபோல தேவூர் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, பருத்தி, எள் செடிகள் உள்ளிட்டவையும் சூறைக்காற்றால் சேதமடைந்தது. மேலும் குள்ளம்பட்டி பகுதியில் ஒரு மின்கம்பம் உடைந்து விழுந்தது. மேட்டாங்காடு, சென்றாயனூர், பெரமாச்சிபாளையம், காவேரிப்பட்டி, தேவூர், மயிலம்பட்டி ஆகிய கிராமங்களில் 20 வேப்பமரங்கள், 3 மாமரங்கள், 4 தென்னை மரங்கள் ஆகியவையும் சாய்ந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தேவூர் கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர், வருவாய் ஆய்வாளர் முனிசிவபெருமாள் உள்ளிட்ட வருவாய் துறையினர், வேளாண்மை துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களிடம் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.