மகளுக்கு பாலியல் தொல்லை கிராம நிர்வாக அலுவலர் போக்சோ சட்டத்தில் கைது


மகளுக்கு பாலியல் தொல்லை கிராம நிர்வாக அலுவலர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 21 April 2019 4:30 AM IST (Updated: 20 April 2019 8:03 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே, பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஆத்தூர், 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள உலிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 38). கிராம நிர்வாக அலுவலர். இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி கடந்த 16.11.2018–ந் தேதி ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார்.

அதில், “எனக்கும், சரவணனுக்கும் 2006–ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2½ ஆண்டுகளாக நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் எனது 11 வயது மூத்த மகளை பார்க்க வருவதுபோல வந்த எனது கணவர் சரவணன், பெற்ற மகள் என்றும் பாராமல் அவளிடம் தவறாக நடந்துகொண்டார். இதுகுறித்து நானும், எனது இளைய மகளும் தட்டிக் கேட்டபோது, அவர் அங்கிருந்து சென்று விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்“ என கூறியிருந்தார் இதன்பேரில் அப்போதைய மகளிர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சரவணனை கைது செய்யக்கோரி அவரது மனைவி ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூவிடம் மீண்டும் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தனது கணவர் மீது மகளிர் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியிருந்தார்.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு, உடனடியாக ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவனுக்கு இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன், சரவணனிடம் விசாரணை நடத்தி, அவர் மீது பெண் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தார்.

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story