சேலத்தில், வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்வு பீன்ஸ் கிலோ ரூ.110–க்கு விற்பனை


சேலத்தில், வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்வு பீன்ஸ் கிலோ ரூ.110–க்கு விற்பனை
x
தினத்தந்தி 21 April 2019 4:30 AM IST (Updated: 20 April 2019 8:08 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. பீன்ஸ் கிலோ ரூ.110–க்கு விற்பனை செய்யப்பட்டது.

சேலம், 

சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, தாதகாப்பட்டி ஆகிய 4 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த உழவர் சந்தைகளுக்கு தற்போது கோடைக் காலத்தையொட்டி காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அதன் விலை உயர்ந்து காணப்படுகிறது.

கடந்த வாரம் கிலோ ரூ.25–க்கு விற்ற தக்காளி நேற்று கிலோ ரூ.36–க்கு விற்கப்பட்டது. வெளிமார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.45 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.60–க்கு விற்ற கேரட் நேற்று ரூ.70–க்கும், உருளைக்கிழங்கு ரூ.28–க்கும், சின்ன வெங்காயம் ரூ.34–க்கும், பெரிய வெங்காயம் ரூ.16–க்கும், புடலை ரூ.34–க்கும் விற்கப்பட்டது.

சேலம் உழவர் சந்தைகளுக்கு ஓசூர், சூளகிரி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பீன்ஸ் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் கிலோ ரூ.84–க்கு விற்ற பீன்ஸ் இந்த வாரம் ரூ.94–க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டில் பீன்ஸ் கிலோ ரூ.110 வரை விற்பனையாகிறது.

இதனால் பீன்சை கிலோ கணக்கில் வாங்கிய பொதுமக்கள் விலை உயர்வினால் தற்போது கிராம் கணக்கில் வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. மேலும் உழவர் சந்தைகளில் கத்தரிக்காய் கிலோ ரூ.30–க்கும், பீட்ரூட் ரூ.36–க்கும், முட்டைக்கோஸ் ரூ.30–க்கும், பாகற்காய் ரூ.40–க்கும், முருங்கைக்காய் ரூ.34–க்கும், இஞ்சி ரூ.98–க்கும், எலுமிச்சை கிலோ ரூ.60–க்கும் விற்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, ‘கோடைக்காலத்தையொட்டி போதிய தண்ணீர் இல்லாததால் உற்பத்தி குறைந்து உழவர் சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளன.

இதனால் பெரும்பாலான காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது‘ என்றனர்.


Next Story