கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்களை உடனே சேர்க்க வேண்டும் பிரின்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்களை உடனே சேர்க்க வேண்டும் பிரின்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 April 2019 10:45 PM GMT (Updated: 20 April 2019 3:15 PM GMT)

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்களை உடனே சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரின்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

குளச்சல்,

தமிழகத்தில் கடந்த 18–ந் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. ஆனால் மீனவ கிராமங்களான தூத்தூர், கடியப்பட்டணம் ஆகிய பகுதிகளில் வாக்களிக்க சென்ற 1000–க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதற்கு காரணம் வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டதே ஆகும்.

42 மீனவ கிராமங்களிலும் இதுபோல் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் சுமார் 50 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது அவர்களின் ஜனநாயக உரிமையை பறிப்பதாகும். இதனால்தான் 100 சதவீதம் வாக்குப்பதிவு ஆகும் என எதிர்ப்பார்த்த கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 69.61 சதவீதம் வாக்குகளே பதிவாகி உள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் மீனவர்கள், சிறுபான்மையினர்களின் வாக்குகள் பறி போய் உள்ளது.

இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என சந்தேகம் எழுந்துள்ளது. அடுத்து உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. மே மாதம் 23–ந் தேதி நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது 18 சட்ட மன்ற இடைத்தேர்தல் வாக்குகளும் எண்ணப்படுகிறது. இந்த வாக்கு எண்ணிக்கைக்குப் பின் 6 மாதத்திற்குள் தமிழக சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்தல் வரலாம். அதனால் நீக்கப்பட்ட  வாக்காளர்களை மீண்டும் உடனே சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.

எனவே கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் நீக்கப்பட்ட வாக்காளர்களை உடனே சேர்க்க வேண்டும். இல்லையென்றால் வாக்குரிமையை இழந்த வாக்காளர்களை ஒன்று திரட்டி பெரும் போராட்டம் நடத்தும் சூழ்நிலை ஏற்படும்.

இவ்வாறு பிரின்ஸ் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Next Story