குன்னூர் அருகே மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 12 பேர் படுகாயம் போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆறுதல்
குன்னூர் அருகே மின்னல் தாக்கி சிறுவர்கள் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
குன்னூர்,
குன்னூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் சின்னாளகோம்பை என்ற ஆதிவாசி கிராமம் உள்ளது. இந்த கிராமம் உலிக்கல் பேரூராட்சியின் 14-வது வார்டுக்கு உட்பட்டது ஆகும். அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 5 மணி முதல் சின்னாளகோம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அந்த நேரத்தில் சின்னாளகோம்பை கிராமத்தில் உள்ள 6 வீடுகளை மின்னல் தாக்கியது.
அப்போது வீடுகளுக்குள் இருந்த தீபா(வயது 21), கமலா(36), நஞ்சம்மா(24), மல்லிகா(60), காவேரி(18), கருப்பன்(65), ஆறுமுகம்(25), நாகராஜ்(3), விக்னேஷ்(3), சுரேந்திரன்(10), செல்வி(21), வள்ளி(21) ஆகிய 12 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சின்னாளகோம்பைக்கு பில்லூர்மட்டத்தில் இருந்து செல்லும் சாலை குறுகலாகவும், கரடு-முரடாகவும் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் மழை பெய்து கொண்டு இருந்ததால், ஆம்புலன்சு வேனால் சின்னாளகோம்பைக்கு செல்ல முடியவில்லை. பின்னர் நேற்று காலை ஆம்புலன்சு வேன் சின்னாளகோம்பைக்குள் சென்றது. மேலும் குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் மற்றும் தாசில்தார் தினேஷ்குமார் ஆகியோர் அங்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் ஆதிவாசி மக்களுடன் இணைந்து மின்னல் தாக்கி படுகாயம் அடைந்தவர்களை ஆம்புலன்சு வேனில் ஏற்றினர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்சு வேன் வெளியே வந்து கொண்டிருந்தது. அப்போது குறிப்பிட்ட ஓரிடத்தில் சாலையில் உள்ள மேடான பகுதியில் ஏற முடியாமல் ஆம்புலன்சு வேன் திணறியது. உடனே மற்றொரு ஆம்புலன்சு வேன் வரவழைக்கப்பட்டு, அதில் 3 பேர் ஏற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து 2 ஆம்புலன்சு வேன்களும் மேடான பகுதியை கடந்து, குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மதியம் 1 மணிக்கு வந்து சேர்ந்தன. அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து சின்னாளகோம்பை ஆதிவாசி மக்கள் கூறியதாவது:-
அடர்ந்த வனப்பகுதியில் உள்ள எங்கள் கிராமத்துக்குள் பகல் நேரத்தில் வாகனங்கள் சென்று வருவதே சிரமத்துக்கு உரியது. இரவு நேரம் என்பதாலும், மழை பெய்து கொண்டு இருந்ததாலும் நேற்று(நேற்று முன்தினம்) ஆம்புலன்சு வேனால் வர முடியவில்லை. ஆனால் மின்னல் தாக்கி படுகாயம் அடைந்த 12 பேரும் இன்று(நேற்று) மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இரவு முழுவதும் அவர்கள் 12 பேரும் வலியால் துடித்து கொண்டு இருந்தனர். அதில் சிறுவர்-சிறுமிகளும் இருந்ததால் தவித்து போனோம். எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ள வசதியாக எங்கள் கிராமத்துக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story