ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை
ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
கோவை,
கோவை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், சூலூர், பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,045 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 2,045 ஓட்டுப்பதிவு எந்திரங்களில் ஓட்டுப்பதிவு நடை பெற்றது. அவை ‘சீல்’ வைக்கப் பட்டு ஓட்டு எண்ணும் மையமான கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி.) பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.
ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஓட்டுப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைகள் மற்றும் கல்லூரியை சுற்றிலும் 112 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த அறைகளை சுற்றிலும் துணை ராணுவத்தினரும், அவர்களுக்கு அடுத்து ஆயுதப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் அந்த அறையின் ஜன்னல் மற்றும் கதவுகளை திறக்க முடியாத அளவுக்கு அடைக்கப்பட்டு உள்ளன. 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் உள்ள ஜி.சி.டி. கல்லூரியை சுற்றிலும் மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. மின்வெட்டு ஏற்பட்டாலும் மின்சார வினியோகம் தொடர்ந்து இருக்கும் வகையில் ஆங்காங்கே ஜெனரேட்டர்கள் வைத்து தடையில்லாத மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அந்த கட்டிடத்தை யாரும் நெருங்காத வகையில் சவுக்கு கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஜி.சி.டி. கல்லூரியின் மற்றொரு பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்பவர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் அனைத்தும் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மளிகை பொருட்கள் மற்றும் பால் பாக்கெட்டுகள் கொண்டு செல்பவர்கள் உள்பட அனைவரின் வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப் படுகின்றன.
ஜி.சி.டி. கல்லூரி வளாகத்தின் பிரதான நுழைவு வாயிலில் போலீஸ் சோதனைச்சாவடி அமைக்கப் பட்டு உள்ளது. வெடிகுண்டு தடுப்பு போலீசார் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி வளாகத்துக்குள் செல்பவர்கள் யார்? அவர்கள் எங்கு செல்கிறார்கள்? என்று போலீசார் விசாரித்து அதன்பிறகு தான் உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அடுத்த மாதம் 23-ந் தேதி வரை நீடிக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story