தனித்தனி விபத்தில் பள்ளி மாணவன் உள்பட 4 பேர் பலி
தனித்தனி விபத்தில் பள்ளி மாணவன் உள்பட 4 பேர் பலியாகினர்.
விழுப்புரம்,
வானூரை அடுத்த எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், கூலி தொழிலாளி. இவருடைய மகன் ஜீவா (வயது 11). இவன் அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்போது 5-ம் வகுப்பு படித்து முடித்துள்ளான்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முருகனும், ஜீவாவும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவக்கரைக்கு சென்று விட்டு மீண்டும் எறையூருக்கு புறப்பட்டனர். கண்டமங்கலம் அடுத்த கொடுக்கூர் என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த வேன், இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சிறுவன் ஜீவா சம்பவ இடத்திலேயே இறந்தான். அவனது தந்தை முருகன் காயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் கண்டமங்கலம் அருகே உள்ள கலித்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ராமு (37) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் கலித்திராம்பட்டில் இருந்து வழுதாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். பக்கிரிபாளையத்தில் சென்றபோது எதிரே வந்த டிராக்டர் மோதியதில் ராமு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்துகள் குறித்து கண்டமங்கலம் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வானூர் அருகே உள்ள தென்கோடிப்பாக்கத்தை சேர்ந்தவர் சந்திரகுமார் (35). இவர் தனது மோட்டார் சைக்கிளில் வானூருக்கு சென்று விட்டு அங்கிருந்து திருச்சிற்றம்பலம் கூட்டுசாலை மார்க்கமாக சென்று கொண்டிருந்தார். ஆகாசம்பட்டு என்ற இடத்தில் சென்றபோது எதிரே புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கிச்சென்ற தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சந்திரகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த அம்மாபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன் மகன் முத்தையா(வயது 38). இவர் சென்னையில் குடும்பத்துடன் தங்கி, கோடம்பாக்கம் பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஸ்டூடியோவில் பணிபுரியும் புகைப்பட கலைஞரான தேவகோட்டையை சேர்ந்த திருப்பதி(29) என்பவருடன் ஒரு காரில் சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு சொந்த ஊரில் இருந்து காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை திருப்பதி ஓட்டினார்.
திண்டிவனம் அடுத்த சாரம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, திருப்பதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோர புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் திருப்பதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முத்தையா பலத்த காயமடைந்தார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story