கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 20 April 2019 11:15 PM GMT (Updated: 20 April 2019 5:20 PM GMT)

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கடலூர், 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 18-ந்தேதி நடந்தது. இதில் கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கடலூர், திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 1,499 வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்.

அதன்பிறகு அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் அனைத்தும் பெட்டிகளில் வைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கல்லூரிக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது.

பின்னர் கடலூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குகள் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் கல்லூரியின் இடது புறம் உள்ள கட்டிடத்திலும், திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதியில் பதிவான எந்திரங்கள் மைய பகுதியில் உள்ள கட்டிடத்தின் 3 தளங்களிலும், நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கல்லூரி வடக்கு பகுதியில் உள்ள கட்டிடத்திலும் பிரித்து வைக்கப்பட் டது. தொடர்ந்து அந்த அறைகளுக்கு நேற்று முன்தினம் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அன்புசெல்வன், போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் தலைமையில், பொது பார்வையாளர் கணேஷ் பி.பாட்டீல் மேற்பார்வையில் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

அதையடுத்து வாக்கு எண்ணிக்கை மையமான அரசு பெரியார் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தின் உள்ளே, வெளியே, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும் 5 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் துப்பாக்கி ஏந்திய போலீசார் காண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையமான கடலூர் அரசு பெரியார் கல்லூரியை கலெக்டர் அன்புசெல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைகளில் சீல் பிரிக்காமல் உள்ளதா? துணை ராணுவம், போலீசார் சரியான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்களா? என்றும் ஆய்வு செய்தார்.மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அங்கு அமைக்கப்பட்டு இருந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story