போதுமான பஸ்கள் இயக்கப்படாததால் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் சாலை மறியல் 100 பேர் மீது வழக்கு
போதுமான பஸ்கள் இயக்கப்படாததால் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம்,
நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வாக்களிப்பதற்காக சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் தங்கியிருந்து வேலை செய்து வருபவர்கள் வடமாவட்டங்கள், தென் மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு சென்றனர். அவ்வாறு செல்வதற்கு விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து போதுமான பஸ் வசதி இல்லாததால் கடந்த 2 நாட்களாக பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து மீண்டும் அவரவர்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து வேலை நிமித்தமாக சென்னை, திருச்சி ஆகிய இடங்களுக்கு சென்றனர். இதனால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் குவிந்தனர்.
ஆனால் விழுப்புரத்தில் இருந்து சென்னை, திருச்சி ஆகிய இடங்களுக்கு போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை. ஒரு சில பஸ்களே இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான பயணிகள், பஸ்சில் ஏற முடியாமல் மிகவும் அவதியடைந்தனர். பஸ்சிற்காக பல மணி நேரம் காத்திருந்த னர். இருப்பினும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மறியலை கைவிடச்செய்தனர்.
அதன் பிறகு விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் இருந்து சென்னை, திருச்சி செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் நேற்று காலை 8 மணிக்கு பின்னரே பயணிகள் கூட்டம் ஓரளவு குறைந்தது.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் இருந்தும் விழாக்காலங்கள், முக்கிய நாட்களில் தேவைக்கேற்ப போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story