சூளகிரி அருகே பயங்கரம் தலையில் கல்லைப்போட்டு பெண் கொலை போலீசார் விசாரணை
சூளகிரி அருகே தலையில் கல்லைப்போட்டு பெண் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளகிரி,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த மேலுமலையில் இருந்து பாலகுன்றாயன துர்க்கம் செல்லும் வழியில், வனத்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் போதை குட்டை என்ற இடம் உள்ளது. அங்குள்ள பாறை இடுக்கில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று பிணமாக கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கொலையுண்டு கிடந்த பெண் நீலநிற சுடிதார் அணிந்திருந்தார். காலில் சாக்ஸ் அணிந்திருந்தார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலை மட்டும் தண்ணீரில் இருந்தது. தலை மீது பெரிய கல் ஒன்று போடப்பட்டு இருந்தது.
மேலும் கொலையான பெண்ணின் உடல் கிடந்த இடம் அருகில் ஆங்காங்கே மதுபாட்டில்கள் கிடந்தன. அந்த பெண்ணின் கையில் ‘பிரேம்‘ என பச்சை குத்தப்பட்டுள்ளது. அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையுண்ட பெண்ணின் கையில் மோதிரம், காலில் மெட்டி, தோடு உள்ளிட்டவை அப்படியே இருந்தது. இதனால் நகை, பணத்திற்காக இந்த கொலை நடக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
இதனால் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து வேறு பகுதியில் கொலை செய்து இங்கு உடலை வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையுண்ட பெண்ணின் உடல் கிடந்த இடத்தில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலையான பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், அருகில் உள்ள கர்நாடக மாநிலத்திலும் மாயமான பெண்கள் பட்டியலை போலீசார் சேகரித்து விசாரித்து வருகிறார்கள். பெண் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story