நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு ஆராய்ச்சி நிலையம் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 21 April 2019 4:00 AM IST (Updated: 21 April 2019 12:00 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி இன்று 10 மி.மீட்டரும், நாளை (திங்கட்கிழமை) 2 மி.மீட்டரும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) 4 மி.மீட்டர் அளவிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் இன்று காற்று மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் தெற்கில் இருந்தும், நாளை மற்றும் நாளை மறுநாள் தென் கிழக்கு திசையில் இருந்தும் வீசும்.

வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 78.8 டிகிரியாகவும், அதிகபட்சமாக 102.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 35 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் அடுத்த 3 நாட்களுக்கு மாலை நேரத்தில் மழை ஆங்காங்கே பெய்ய வாய்ப்பு உள்ளது. மேகமூட்டம் அதிகரித்து காணப்படுவதோடு, பகல் மற்றும் இரவு வெப்ப அளவுகள் குறைய வாய்ப்பு உள்ளது. இது கோழிகள் இடையே வெப்ப அயற்சியை குறைத்து, தீவன எடுப்பை உயர்த்த பயன்படும். இருப்பினும், கோடை காலம் என்பதால் கோழிப்பண்ணையாளர்கள் தொடர்ந்து அயற்சியை குறைக்கும் முறைகளில் ஈடுபட வேண்டும்.

கடந்்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சி காரணமாக பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல் சிறந்த கோடைகால மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். மேலும், கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க வெயில் நேரங்களில் தெளிப்பான்களை உபயோகிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story