நலிவடைந்த பிரிவினர் தனியார் கல்வி நிறுவனங்களில் 25 சதவீத ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல்


நலிவடைந்த பிரிவினர் தனியார் கல்வி நிறுவனங்களில் 25 சதவீத ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 21 April 2019 3:00 AM IST (Updated: 21 April 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

தனியார் கல்வி நிறுவனங்களில் 25 சதவீத ஒதுக்கீட்டுக்கு நலிவடைந்த பிரிவினர் விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

நெல்லை, 

தனியார் கல்வி நிறுவனங்களில் 25 சதவீத ஒதுக்கீட்டுக்கு நலிவடைந்த பிரிவினர் விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

25 சதவீதம் இடஒதுக்கீடு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கை செய்ய வழி செய்யப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 434 தனியார் சுயநிதி பள்ளிகளில் (மெட்ரிக், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி) நுழைவு நிலை (எல்.கே.ஜி.) 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 5,692 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

இணையதள முகவரி

இதற்கான வசதி http://rte.tnschools.gov.in/tamilnadu என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பெற்றோர் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே அதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அலுவலகங்களில் இலவசமாக விண்ணப்பங் களை பதிவேற்றம் செய்யலாம்.

அரசு இ-சேவை மையங்களில்...

மேலும், மாவட்டத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களிலும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

இணைய வழியாக பதிவு செய்வதற்கு பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடத்துக்கான ஆதார சான்று ஆகிய சான்றிதழ்களுடன் குழந்தைகளின் புகைப்படமும் கொண்டு வரவேண்டும்.

நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (மே) வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story