மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை + "||" + In Nellai district Widespread rain

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இருந்த போதிலும் பாபநாசம் அணை நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது.
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இருந்த போதிலும் பாபநாசம் அணை நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது.

மழை

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சிவகிரி பகுதியில் 100 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் நெல்லையில் நேற்று காலை வெயில் கொளுத்தியது. மதியம் 1.45 மணி அளவில் கரு மேகங்கள் திரண்டு வந்தன. 2 மணி அளவில் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. நெல்லை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்தது. சுமார் 30 நிமிடம் மழை நீடித்தது. திடீரென்று கோடை மழை பெய்ததால் இதமான சூழ்நிலை நிலவியது.

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. அனல் காற்று வீசியது. மாலை 4 முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 4.45 மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இந்த மழை 5.05 மணி வரை பெய்தது. இதேபோல் பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளம், தெற்குபனவடலி, ஆயாள்பட்டி, ஆராய்ச்சிபட்டி, திருமலாபுரம் ஆகிய பகுதிகளில் மதியம் சுமார் ½ மணி நேரம் பரவலாக மழை பெய்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் செங்கோட்டையில் நேற்று மாலை இடி, மின்னலுடன் சுமார் 1 மணி நேரம் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக பெய்த இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பாபநாசம் அணை

கோடைகாலம் என்பதால் பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் பெருமளவு வறண்டு விட்டன. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 17.80 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1.85 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 54.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பாபநாசம் அணை குட்டைப்போல காட்சி அளிக்கிறது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 47.60 அடியாக உள்ளது.

118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 76.86 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 37 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.