திண்டுக்கல்லில் லாரி உரிமையாளர் அலுவலகத்தில் ரூ.90 ஆயிரம் திருட்டு
திண்டுக்கல்லில், லாரி உரிமையாளர் அலுவலகத்தில் ரூ.90 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடினர்.
திண்டுக்கல்,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர். பட்டியை சேர்ந்தவர் வனராஜன் (வயது 40). லாரி உரிமையாளரான இவர் ஆர்த்தி தியேட்டர் ரோட்டில், ‘லாரி சர்வீஸ்’ என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வருகிறார். கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்காக இவருடைய லாரிகளை வாடகைக்கு விட்டு வருகிறார். இவருடைய அலுவலகத்துக்கு அருகில் ‘கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டரும்’ உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனராஜன் தனது அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். அதேபோல் ‘பிரவுசிங் சென்டர்’ உரிமையாளரும் அதனை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் வனராஜன் வழக்கம் போல் தனது அலுவலகத்தை திறந்தார். அப்போது அலுவலக கட்டிடத்தின் மற்றொரு பக்கத்தில் இருந்த கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்துள்ளது. அலுவலகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.
இதனால் பதற்றமடைந்த அவர் பாதுகாப்பு பெட்டகத்தை சோதனையிட்டார். அப்போது அதில் இருந்த ரூ.90 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றதையறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து நகர் வடக்கு போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்த கதவை பார்வையிட்டனர். அப்போது அருகில் உள்ள ‘கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டரின்’ கதவில் இருந்த பூட்டும் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை போலீசார் பார்த்தனர். நல்லவேளையாக அங்கு பணம், பொருட்கள் திருடு போகவில்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் ‘கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டர்’ உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் அங்கு வந்தனர். அவர்கள் லாரி சர்வீஸ் அலுவலகம் மற்றும் ‘கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டரில்’ பதிவான தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது லாரி சர்வீஸ் அலுவலகம், பிரவுசிங் சென்டரில் மோப்பம்பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story