நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர், தாயிடம் 15 பவுன் நகை திருட்டு


நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர், தாயிடம் 15 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 20 April 2019 10:00 PM GMT (Updated: 20 April 2019 8:02 PM GMT)

துறையூரில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் மற்றும் அவருடைய தாயாரிடம் 15 பவுன் நகையை திருடிச்சென்ற டவுசர் கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தெப்பக்குள தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 36). டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர். இவர் தனது தந்தை ராஜேந்திரன்(73), தாயார் செந்தமிழ் பூங்கொடி (70) ஆகியோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 3 பேரும் வீட்டின் தரை தளத்தில் உள்ள கதவை பூட்டிவிட்டு மாடியில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமி ஒருவன் உள்ளே நுழைந்தான்.

அவன் மாடிக்கு சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த செந்தமிழ் பூங்கொடி கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தாலி சங்கிலியையும், அவருக்கு அருகில் தூங்கிக்கொண்டிருந்த கார்த்திகேயன் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியையும் வெட்டி எடுத்தான். பின்னர் அங்கிருந்து தரைத்தளத்துக்கு வந்த அவன், வேறு நகை, பணம் இருக்கிறதா? என்று தேடி உள்ளான்.

அப்போது, தூக்கத்தில் இருந்த கார்த்திகேயன் தரைத்தளத்தில் இருந்து சத்தம் வருவதை கேட்டு திடுக்கிட்டார். உடனே அவர் மின்விளக்குகளை போட்டு விட்டு, மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது, டவுசர் அணிந்த ஒருவன் வீட்டில் இருந்து தப்பி ஓடுவதை கண்டு திடுக்கிட்டார். உடனே அவர் ‘திருடன், திருடன்’ என்று சத்தம் போட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம், பக்கத்தினரும், அவரும் அந்த டவுசர் கொள்ளையனை துரத்தி சென்றனர். ஆனால் அவன், அருகில் உள்ள பெரிய ஏரி பகுதிக்கு சென்று மறைந்துவிட்டான்.

நள்ளிரவு நேரம் என்பதால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராவல்ஸ் உரிமையாளர் மற்றும் அவருடைய தாயாரிடம் 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற டவுசர் கொள்ளையனை தேடி வருகிறார்கள். துறையூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் கடைகள், ஆட்கள் இல்லாத வீடுகளில் திருட்டு, தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story