சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு புதுவை கோவில்களில் விசேஷ வழிபாடு


சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு புதுவை கோவில்களில் விசேஷ வழிபாடு
x
தினத்தந்தி 20 April 2019 10:30 PM GMT (Updated: 20 April 2019 8:52 PM GMT)

சித்ராபவுர்ணமியை முன்னிட்டு புதுவையில் உள்ள கோவில்களில் விசேஷ வழிபாடு நடந்தது.

புதுச்சேரி,

விகாரி தமிழ்புத்தாண்டின் முதல் திருவிழாவான சித்ராபவுர்ணமியை யொட்டி புதுவை கோவில்களில் விசேஷ அபிஷேக, அலங்கார ஆராதனைகளுடன் வழிபாடு நடந்தது. மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர், முத்தியால்பேட்டை கற்பக விநாயகர், பொன்னுமாரியம்மன், கணபதி நகரில் உள்ள சீரடி சாய்பாபா, பெரியாண்டவர், வன்னியபெருமாள் உள்பட பல்வேறு கோவில் களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள்கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

புதுவை பஸ்நிலையம் எதிரில் மறைமலையடிகள் சாலையில் உள்ள கலியுக பாராசக்தி, கவுசிக பாலசுப்பிரமணியர், துளசி முத்து மாரியம்மன், காந்திவீதி கன்னிகா பரமேஸ்வரியம்மன், நாகமுத்துமாரியம்மன் ஆகிய கோவில்களில் கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்கும் வகையிலும், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டும் அம்மனுக்கு விசேஷ அபிஷேக, அலங்கார பூஜைகளுடன் வழிபாடு நடந்தது. இரவு 7 மணி அளவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

காந்திவீதி வரதராஜ பெருமாள் கோவில், ராமகிருஷ்ணாநகரில் உள்ள ஹயக்ரீவர் கோவில், எம்.எஸ். அக்ரகாரத்தில் உள்ள வீரஆஞ்சநேயர் கோதண்டராமர், தென்கலை அய்யங்கார் சீனிவாச பெருமாள் ஆகிய கோவில்களில் விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. மேலும் ஸ்ரீராம நவமி உற்சவம் 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.பெருமாள் வீதி உலாவும் நடைபெற்றது.

புதுவை பல்கலைக்கழகம் எதிரில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் உள்ள பிரார்த்தனை மண்டபத்தில் சித்ரா பவுர்ணமி கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு அபிஷேகமும், சாய் பஜனையும் நடந்தது. .இரவு 7 மணி அளவில் சத்யநாராயணா பூஜையும் தொடர்ந்து ஆரத்தி மற்றும் அன்னதானம் நடைபெற்றது. 

Next Story